அற்புத வரம் தரும் அபிராமி அம்மன்


அற்புத வரம் தரும் அபிராமி அம்மன்
x
தினத்தந்தி 10 March 2020 4:30 AM IST (Updated: 9 March 2020 8:11 PM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணி பெண்களைக் காக்கும் இறைவியைக் காண வேண்டுமா? வாருங்கள்.. அபிராமபுரத்திற்கு.

இந்த ஊரில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயா் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘அபிராமி அம்பிகை.

அபிராமபுரம் ஒரு சிறிய கிராமம். இங்கு இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரம். அதைக் கடந்ததும் விசாலமான பிரகாரம். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

மகா மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்க, வலதுபுறம் அன்னை அபிராமியின் சன்னிதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மமும், அங்க மாலையும் தாங்கியிருக்கிறாள் அன்னை. கீழே உள்ள ஒரு கரம் அபய முத்திரையை பிரதிபலிக்க, இன்னொரு கரம் ஊரு ஹஸ்த நிலையில் அமைந்திருக்க, அன்னை புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள்.

அம்மன் கருவறையின் எதிரே உள்ள அர்த்த மண்டபத்தை அடுத்துள்ளது, சுவாமியின் கருவறை. இங்கு இறைவன் பிரம்மபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியில், கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தின் மேல் திசையில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் காணப்படுகின்றன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் இது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

இந்த ஊரில் ஒரு கர்ப்பிணி பெண் இருந்தாள். ஒரு நாள் அவளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலை சிக்கலாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தை நலமாக பிறக்குமா என்பது சந்தேகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கதறித் துடித்த அந்தப் பெண், மீண்டும் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தாள். வழியில் இத்தல அன்னையை வழிபட்டு, அவளிடம் முறையிட்டாள்.

அன்று இரவு அவள் கனவில் வந்த அன்னை அபிராமி, ஒரு சிறுமியை கனவிலேயே அவள் வீட்டு வாசலில் விட்டுவிட்டு மறைந்தாள்.

அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, மறுநாள் பிரசவ வலி அதிகமானது. அந்தப் பெண்ணை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இப்போது அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஆச்சரியம். இப்போது குழந்தைக்கு இருந்த சிக்கல் அனைத்தும் நீங்கியிருந்தது. சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவத்துடன் அழகான பெண் குழந்தை பிறந்தது.

தனது வேண்டுதலை ஏற்று, அபிராமி அன்னையே தன்னையும், பிள்ளையையும் காப்பாற்றியதாக அந்தப் பெண் நினைத்தாள். தன் குழந்தைக்கும் அம்பாளின் திருநாமத்தையே சூட்டினாள். அபிராமி அன்னைக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அபிஷேக, ஆராதனை செய்தாள்.

இந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது. கர்ப்பிணி பெண்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சுகப் பிரசவம் ஆவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வழித்தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபிராமபுரம் என்ற இந்த தலம். மல்லிகா சுந்தர்.

Next Story