பயன்தரும் கல்வியை வழங்கும் கிரகங்கள்


பயன்தரும் கல்வியை வழங்கும் கிரகங்கள்
x
தினத்தந்தி 10 March 2020 10:24 AM GMT (Updated: 10 March 2020 10:24 AM GMT)

மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மனிதனுக்கு கல்வி மிகவும் அவசியம்.

னிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இந்த அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மனிதனுக்கு கல்வி மிகவும் அவசியம். கல்வி மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அது மனிதனுக்கு அறிவு, திறமை, பண்பாடு, நன்நடத்தை போன்றவற்றை தருகிறது. அறியாமையை நீக்கி சிந்தனை திறனை அதிகரித்து, முழு ஆற்றல் உள்ளவனாக மாற்றுகிறது.

மனித வாழ்க்கையை முறைப்படுத்தும் சக்திவாய்ந்த கருவியான கல்வி, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களால் மக்களை எளிதில் சென்று அடையும் விதத்தில் இருந்தால் கூட, ஒரு சிலருக்கு வாய்ப்பு இருந்தும் கற்க முடியாத நிலையையும், ஒரு சிலருக்கு கற்ற கல்வியால் பயன் இல்லாத நிலையையும் தந்து விடுகிறது. அதற்கான காரணங்களை காணலாம்.

ஜாதகத்தில் லக்னம், கேந்திரம் மற்றும் திரிகோணம் வலிமைபெற்றிருந்தால், அந்த பிள்ளைகள் படித்து பட்டங்களும், பதக்கங்களுமாக குவிப்பார்கள்.

கல்வி கிரகமான புதன், ஆட்சி, உச்சம், நட்பு பலம் பெற்று, லக்ன, கேந்திர, திரிகோணங்களுடன் இணைவு பெற்றிருந்தாலோ, அறிவுக்கு அதிபதியான குருவும், மனோகாரகன் சந்திரனும் வலுப்பெற்றிருந்தாலோ சிறு வயது முதல் படித்து முடிக்கும் வரை அந்த நபர் சாதனை மாணவராகவே இருப்பார்.

சில குழந்தைகள் இளம் வயதில் சரியாக படிக்காமல், மத்திம வயதில் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.

இதற்கு காரணம் மத்திம வயதில் வரும் தசாபுத்தியில் 4-ம் பாவகத்தை இயக்கும் கிரகம் சுப வலிமை பெற்றதாக அமைந்துவிடுவதுதான்.

சிலர் இளம் வயதில் நன்றாக படித்து, மத்திம வயதில் கவனக் குறைவால் படிப்பில் ஆர்வம் இழப்பார்கள். இவர்களுக்கு 2-ம் பாவகம் சுப வலிமையாகவும், 4-ம் பாவகம் வலிமை குன்றியும் இருக்கும். எது எப்படி இருந்தாலும் ஒருவரின் கல்வியை தீர்மானம் செய்வதில் புதன் மற்றும் 4, 5 பாவகத்தின் பங்கு மிக முக்கியமானது.

ஜனன ஜாதகத்தில் புதன் - ராகு அல்லது புதன் - சனி இணைந்திருந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு வகையில் சம்பந்தம் பெற்றிருந்தாலோ, சிறு வயதிலேயே ராகு தசை, சுக்ர தசை நடந்தாலோ, அவர்களுக்கு படிப்பில் மந்த நிலை உருவாகும். 4, 5-ம் பாவக அதிபதி அல்லது 4, 5-ம் பாவகத்தில் நீச்ச, அஸ்தமன, வக்ர கிரகங்கள் இருப்பது இளம் பருவத்திலேயே படிப்பில் தடையை ஏற்படுத்தும்.

கல்விக்கான காரக கிரகம் புதன், தன்னுடைய பயண பாதையில் சுப கிரகங்களை தொடும்போது சிறப்பான கல்வியை தரும். அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் இவற்றை தொடும்போது கல்வியில் தடையை கொடுக்கும். அதே நேரம் அசுப கிரகங்களை புதன் தொடும் போது, அந்த காரகத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பை தேர்ந்தெடுத்து படித்தால் தடை உருவாகாது. உதாரணமாக புதன், கேதுவை தொட்டால் கேதுவின் காரகத்துவம் தொடர்பான ஜோதிடம், ஆன்மிகம், சட்டம் தொடர்பான படிப்பை எடுத்துப் படிக்கும்போது அந்த படிப்பில் தடை ஏற்படாது. ஜாதகத்தின் குறையை தனக்கு சாதகமாக மாற்ற முயலும்போது, ஜாதகர் அடையும் வெற்றி அளப்பரியது.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் பிள்ளை என்ன படிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகளின் மீதும் திணிக்க முயல்கிறார்கள். ‘எந்த படிப்பை தேர்வு செய்து படித்தால், பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?’ என்ற மனக் குழப்பமும் நிறைய பெற்றோரிடம் இருக்கிறது. சில பெற்றோர்கள்தான், பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப படிப்பை தேர்வு செய்ய உதவுகிறார்கள். பலரும் தாங்கள் படிக்க நினைத்து நிறைவேறாத ஆசையை, பிள்ளைகளின் மீது புகுத்தி படிக்க வைக்க நினைக்கிறார்கள்.

பிள்ளைகளின் விருப்பமோ, பெற்றோரின் விருப்பமோ எதுவாக இருப்பினும், கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களின் ஜனன ஜாதகத்தில், ஜீவனத்தைக் குறிப்பிடும் 10-ம் பாவகத்தை முதன்மை படுத்தி கல்வியை தேர்வு செய்வது சிறப்பு.

ஒருவர், தான் எவ்வளவு கல்வி கற்றாலும், அதனை செயல் வடிவில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கற்ற கல்வியின் பயன் அவருக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் கற்ற கல்வியால் பயன் இல்லாமல் போய்விடும்.

புதன், கேந்திர திரிகோணத்துடன் சம்பந்தம் பெறும் ஜாதகர் மட்டுமே, தாங்கள் கற்ற கல்வியை அதிகம் பயன்படுத்துபவர்கள்.

பரிகாரங்கள்

புதன் கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்துகொண்டால், புதனால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள், புதன் கிழமை தோறும் பச்சைப் பயரை உணவில் சேர்ப்பதுடன், ஹயக்கிரீவருக்கு நெய் தீபம் ஏற்றி துளசி இலையால் அர்ச்சனை செய்தால் நன்மைகள் கிடைக்கும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story