வீண் விரயம் வேண்டாம்


வீண் விரயம் வேண்டாம்
x
தினத்தந்தி 13 March 2020 9:12 AM GMT (Updated: 13 March 2020 9:12 AM GMT)

ஏக இறைவன் நம்மை படைத்ததோடு மட்டும் விட்டுவிடவில்லை. மாறாக எண்ணற்ற அருட்கொடைகளையும் வழங்கியுள்ளான்.

மனிதனது அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை மற்றும் உறைவிடம் ஆகியவையே அருட்கொடைகள் என்றுதான் நம்மில் பலர் எண்ணலாம். சிலபோது இது சரியான கருத்தாகவும் இருக்கலாம்.

ஆனால் இவை மட்டும்தான் அருட்கொடைகளா..?. இல்லை இதையும் தாண்டி வேறு அருட்கொடைகள் இருக்கின்றனவா என்று எண்ணிப் பார்த்தால்.. எண்ணி முடிக்க இயலாத அருட்கொடைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றில் எதேனும் ஒன்றை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால்கூட அதற்கு உறுதுணையாக பல்வேறு உபரி அருட்கொடைகள் தேவைப்படும். ஓர் அருட்கொடையின் உதவியின்றி இன்னொரு அருட்கொடையை நம்மால் அனுபவிக்கவும் முடியாது. இதுதான் இயற்கை நியதி. இந்த ரீதியில் எண்ணினால் அருட்கொடைகளை கூறிக்கொண்டே போகலாம்.

உதாரணமாக, அரிசியை எடுத்துக் கொள்வோம். அதை உற்பத்தி செய்ய விவசாயி, விவசாய நிலம், தண்ணீர், மாடுகள், உரிய காலம், உரம், சூரியன் போன்ற எல்லாமே தேவைப்படும். நெல் என்ற அருட்கொடை உற்பத்தியாகி அறுவடைக்குத் தயாராவதற்கு மட்டும்தான் இவை தேவைப்படும். உற்பத்தியான பின் அந்த நெல் அரிசியாக நம் கரங்களில் தவழ வேண்டுமெனில் அதனை விநியோகிக்க ஆட்கள், விற்பதற்கு சந்தைகள் இப்படி எத்தனையோ வகையான அருட்கொடையின் கூட்டுக் கலவைதான் நாம் அன்றாடம் உண்ணும் அரிசி எனும் உணவு.

இவ்வாறு எண்ணற்ற அருட்கொடைகளை அனுதினமும் இறைவன் தன் அடியார்களுக்கு வாரி வழங்கிக்கொண்டே இருக்கின்றான். அவற்றை எண்ண முற்பட்டால் உங்களால் எண்ணி முடிக்கவே முடியாது. அவன் வழங்கிய அருட் கொடைகளின் சிறு பட்டியலைப் பாருங்கள்:

“நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா? மேலும், உங்களை (ஆண்-பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா? மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா? மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா? மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா? மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா? மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா? மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா? தானியங்களையும் தாவரங்களையும் மற்றும் அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக!” (திருக்குர்ஆன் 78:6-16)

இந்த அருட்கொடைகளுக்கு நாம் செய்யும் கைமாறு என்ன?

நம்மால் உருவாக்க இயலாத இந்த அருட்கொடைகளை தாறுமாறாக வீண்விரயம் செய்கின்றோம். வீண்விரயம் என்றால் என்ன? மானிடர்கள் புரியும் அத்துணை வினை களிலும் ஏவலை கடப்பதே வீண் விரயம் ஆகும்.

இன்றைய மனிதர்கள் உணவு உட்கொள்ளும்போது செய்யும் விரயம் சகித்துக்கொள்ள இயலாத ஒன்று.

‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது தமிழர் பழமொழி. “ஓடும் ஆற்றில் ஒளு செய்தாலும் தண்ணீரை வீண் விரயம் செய்யாதே!” என்கிறது நம் அண்ணலாரின் பொன்மொழி. (நூல்: அஹ்மத், இப்னுமாஜா)

இப்படிப்பட்ட அண்ணலாரின் வழிகாட்டுதல்களைப் பெற்ற இஸ்லாமிய சமூகம்தான் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை அனைத்திலும் பகட்டையும் விரயத்தையும் கடைபிடிக்கின்றனர். விரயம் செய்பவர்களை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லையே. இது இறைவனே அருள் மறையில் கூறும் செய்தி.

அல்லாஹ் கூறுகின்றான்: “உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை”. (7:31)

இன்றைய சமூகத்தின் வீண் விரயங்கள்

விரயங்களிலேயே மிக மோசமான விரயம் தண்ணீர் விரயம் தான். ‘தண்ணீரை வீணடிக்காதீர்’ என்ற நபிகளாரின் அற்புதமான உபதேசத்தைப் பெற்றிருக்கும் இஸ்லாமிய சமூகம், நீர் மேலாண்மை குறித்தோ வருங்கால சந்ததிக்கு அதை சேமித்து வைக்க வேண்டும் என்பது குறித்தோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமே.

பேரண்டத்தின் அனைத்துப் படைப்புகளும் தண்ணீர் மூலம்தான் படைக்கப்பட்டுள்ளது என்கிறான் இறைவன்.

இறைவன் கூறுகின்றான்: “மேலும், அல்லாஹ் ஒவ்வோர் உயிர்பிராணியையும் ஒரே விதமான நீரிலிருந்து படைத்தான்”. (24:45)

வீணடிக்காமல் உணவு உட்கொள்வதன் ஒழுக்கம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“(உண்ணும் போது) வயிற்றின் மூன்றில் ஒரு பகுதியளவு உண்ண வேண்டும். மூன்றில் ஒரு பகுதி நீர் குடிக்க வேண்டும். மூன்றில் ஒரு பகுதி விட்டுவிட வேண்டும்” (திர்மிதி, இப்னுமாஜா)

சுய விசாரணை தேவை

நாம் வீணடிக்கும் ஒவ்வொரு துளி தண்ணீருக்கும், ஒவ்வொரு துகள் உணவுக்கும், ஒவ்வொரு மின் திறனுக்கும் இறைவனிடம் பதில் கூறியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இவற்றை நாம் ஒருபோதும் வீணடிக்க மாட்டோம்.

உலகின் ஒரு மூலையில் எங்கோ ஒருவர் பசியுடன் இருக்கின்றார் என்றால், மற்றொரு மூலையில் எங்கோ ஒருவர் அவருக்கான உணவை அபகரித்து வைத்துள்ளார் அல்லது வீணடிக்கின்றார் என்று பொருள்.

அவ்வாறுதான் நாம் வீணடிக்கும் தண்ணீரும் மின்சாரமும். வேறு யாருக்கோ உரிமையான இந்த அருட்கொடைகளை வீணடிக்கும் போது, இது வேறு யாருக்கோ சொந்தமானது என்ற உணர்வு வரவேண்டும்.

அத்துடன் நிச்சயம் நாளை மறுமையில் இறைவனின் சந்நிதியில் நிற்கும்போது இது குறித்தும் நாம் விசாரிக்கப்படுவோம், பதில் கூறித்தான் ஆகவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வும் வர வேண்டும்.

 - முஹம்மது ஷுஐப், திருச்சி.


Next Story