சத்யோஜாத முகத்தின் வடிவங்கள்


சத்யோஜாத முகத்தின் வடிவங்கள்
x
தினத்தந்தி 26 May 2020 12:33 AM GMT (Updated: 2020-05-26T06:03:53+05:30)

சிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

 ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்கிற 5 முகங்களில் இருந்து இந்த வடிவங்களை அவர் எடுத்தார். இந்த 64 வடிவங்களில் 25 வடிவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதில் சத்யோஜாத முகத்தில் இருந்து தோன்றிய 5 வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

உமாமகேஸ்வரர்

ஈசனும் உமாதேவியும் அமர்ந்த அல்லது ஆலிங்கன (தழுவிய) கோலத்தில் இருக்கும் காட்சியை, ‘உமா மகேஸ்வரர்’ என்பார்கள். சகல காரிய சித்தியும் அருளும் திருவடிவம் இதுவாகும். ஆனந்தத்தை அருள்பவரும் இந்த வடிவ மூர்த்திதான்.

லிங்கோத்பவர்


பிரம்மனாலும், மகாவிஷ்ணுவாலும் அடி முடி காண முடியாத தனது உண்மை வடிவத்தை, ஜோதி வடிவமாக இருவருக்கும் காட்டி அருளிய வடிவம் இதுவாகும். இந்த வடிவத்தில் ஈசனின் தலைப்பகுதியை நோக்கி அன்னப் பறவை வடிவில் பிரம்மனும், திருவடியைத் தேடி வராஹ உருவத்தில் விஷ்ணுவும் செல்வது போன்று இருக்கும். இந்த அமைப்பை திருவண்ணாமலை திருத்தலத்தில் தரிசிக்கலாம்.

ஹரிஹரமூர்த்தி

சங்கர நாராயணர் கோவில் திருக்கோலத்தில் தரிசிக்க வேண்டிய அற்புதமான கோலம் இது. அம்பிகையின் அம்சமாக திருமாலை தனது உடலில் இடது பாகமாக இடம்பெறச் செய்து அருள்பாலிக்கும் சிவபெருமானின் தோற்றம் இதுவாகும்.

சுகாசனர்

சிவபெருமானின் வலது கரம் உபதேச கிரமத்திலும், இடது கரம் அம்பிகையின் மேனியைத் தொட்ட நிலையிலும் இந்த வடிவமானது காணப்படும். வேத சிவாகமங்களை உமாதேவியருக்கு உபதேசிக்க முற்பட்ட பாதையை உணர்த்தும் திருக்கோலம் இது.

அர்த்தநாரி

உமையை தனது உடலில் ஒரு பாகமாக கொண்டு காட்சி தருபவர், அர்த்தநாரீஸ்வரர் ஆவார். உடலில் வலது பாகம் ஈசனாகவும், இடது பாகம் உமையாகவும் காட்சி அளிக்கும் ஒப்பற்ற வடிம் இது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகத்திற்கு உணர்த்தும் வடிவமாகவும் இதனை சொல்வார்கள். உலகத்து இன்பங்களை முற்றாகப் பெற திருச்செங்கோடு திருத்தலம் செல்லலாம்.


Next Story