ஆன்மிகம்

உயர்வு தரும் விசாகத் திருநாள் + "||" + visaga thirunal gives the rises

உயர்வு தரும் விசாகத் திருநாள்

உயர்வு தரும் விசாகத் திருநாள்
ஆறு நட்சத்திரங்களின் கூட்டமே ‘விசாக நட்சத்திரம்’ ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், முருகப்பெருமானை ‘விசாகன்’ என்றும் அழைப்பார்கள்.
 ‘வி’ என்றால் ‘பட்சி’ (மயில்) என்றும், ‘சாகன்’ என்றால் ‘பயணம் செய்பவர்’ என்றும் பொருள். அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர். இதனாலும் முருகப்பெருமான், ‘விசாகன்’ எனப்படுகிறார்.

வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. எமதர்ம ராஜனின் அவதார தினமும் இதுவே. எனவே இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாக நம்பிக்கை.


மகாபாரதத்தின் இணையற்ற வில் வீரனாக அறியப்படும் அர்ச்சுனன், பாசுபத அஸ்திரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றது வைகாசி விசாக நாளில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.

திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ் வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.

வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் வைகாசி விசாக நாளில் தான். பெரும்பான்மையான கோவில்களில், இந்த நாளில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.

வான்மீகி ராமாயணத்தில், ராம-லட்சுமணர் களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளை விஸ்வாமித்திரர் கூறுவார். மேலும் இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார். இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுகிறார். இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர், முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு ‘குமார சம்பவம்’ என்று பெயரிட்டுள்ளார்.

சித்தார்த்தர் என்னும் கவுதம புத்தர் பிறந்த தினமும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பவுர்ணமி அன்று கொண்டாடப் படுகிறது. இதனையே ‘புத்த பூர்ணிமா’ என்று அழைக்கின்றனர்.

வைகாசி மாதம் என்பது, வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோவில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இளவேனிற் காலத்தில் இவ்விழா நடை பெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவ னுக்குச் சிறுபருப்புப் பாயசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து ‘உஷ்ணசாந்தி உற்சவம்’ (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது உண்டு.

இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பராசரமுனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங் களையும் வைத்து சாப விமோசன நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம்.