விசாகமும்.. விழாக்களும்..


விசாகமும்.. விழாக்களும்..
x
தினத்தந்தி 2 Jun 2020 1:12 AM GMT (Updated: 2020-06-02T06:42:29+05:30)

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது உண்டு.

விசாகம் குருவிற்குரிய நட்சத்திரம் ஆகும். எனவே குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு, வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சி தரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு, வைகாசி விசாக நாளில் சந்தனக்காப்பை களைவார்கள். மூல விக்கிரகத் தின் இயற்கை தோற்றப்பொழிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

கன்னியாகுமரி அம்மனுக்கு, வைகாசி விசாக நாளில் ‘ஆராட்டு விழா’ நடைபெறுவது வழக்கம். சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெறும்.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான், வைகாசி விசாகத்தில் சித்தியடைந்தார். அந்தநாளில் அவரது குருபூஜை திருப்போரூரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் விசாக திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வார்கள். விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி, கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால் பாவ வினைகளும், நோய்களும் தீரும். செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை.

வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அருகு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு, உத்திரகோசமங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடிகொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

Next Story