செல்வ விருத்தி தரும் வைகாசி விசாகம்


செல்வ விருத்தி தரும் வைகாசி விசாகம்
x
தினத்தந்தி 2 Jun 2020 1:26 AM GMT (Updated: 2020-06-02T06:56:27+05:30)

4-6-2020 வைகாசி விசாகம் . முருகப்பெருமானுக்கு, வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர். சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள விரும்பினார். அதன்படி தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவை தேவர்களால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.

சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அது ஒரு வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர தினமாகும். எனவே தான் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு முருகன், சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர் களின் வாக்கு.

அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப்பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு வைத்து, அதில் ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த நன்னாளில் முருகப் பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்லன யாவும் நடை பெறும். பசும் பாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால், இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தி யாகும்.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Next Story