ஆனி மாதத்தின் சிறப்பு


ஆனி மாதத்தின் சிறப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 6:10 AM GMT (Updated: 2020-06-09T11:40:25+05:30)

ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் அன்று, மாலை வேளையில் நடராஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை ‘ஆனி திருமஞ்சனம்’ என்று அழைப்பார்கள்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில், ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அன்று, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படும்.

சில ஆலயங்களில் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. திருச்சி அருகே உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், அன்றைய தினம் மாம்பழ அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் கூடை கூடையாக மாம்பழங்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பிப்பார்கள். அதைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் அந்த மாம்பழங்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

புதுச்சேரி அருகே உள்ள காரைக்காலில், காரைக்கால் அம்மையாருக்கு தனிக் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி 4 நாட்கள் விழா நடைபெறும். அதில் பவுர்ணமி அன்று, மாங்கனித் திருவிழா விசேஷமானது.

அன்றைய தினம் காரைக் கால் கயிலாசநாதர் மற்றும் அம்பாளுடன், காரைக்கால் அம்மையாரின் திருவுருவச் சிலையும் ஊர்வலமாக கொண்டுவரப்படும். அந்த பகுதியில் உள்ள அனைவரும் வீட்டின் மாடியில் நின்றபடி மாம்பழங்களை அம்மையை நோக்கி வீசி வழிபாடு செய்வார்கள்.

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி தினத்தன்று, சுவாமிக்கு வாழைப்பழ தார்களை கொண்டு வந்து காணிக்கை யாக சமர்ப்பித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

தங்களின் குடும்பம் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று எண்ணும் மக்கள், இப்படி வாழைத் தார்களை கொண்டு வந்து சுவாமிக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்கிறார்கள். வழிபாட்டின் முடிவில் இந்த வாழைப் பழங்கள் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Next Story