ஆன்மிகம்

நம்பிக்கையே அஸ்திவாரம் + "||" + Christianity : Hope is the foundation

நம்பிக்கையே அஸ்திவாரம்

நம்பிக்கையே அஸ்திவாரம்
கடவுள் பற்றி சந்தேகம் மனித உள்ளத்தில் எழக்கூடியது இயல்பானதுதான். ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதும் காரணங்களை, விளக்கங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.
நாம் மட்டுமல்ல, இயேசுவோடு வாழ்ந்த, பழகிய பலரும் நம்மைப்போன்று சந்தேகித்துள்ளனர். அப்படி நடந்த சம்பவம் ஒன்று நமக்கு பாடமாகிறது.

புனித யோவான் எழுதிய நற்செய்திப் புத்தகம் அதிகாரம் 14-ல் 6 முதல்14 வரையிலான வசனங்களை வாசித்தால் பிலிப்புவுக்கு இயேசு எடுத்துகாட்டிய உண்மை புலப்பட்டுவிடும். அக்காலத்தில் தோமாவை நோக்கி இயேசு கூறியது:

“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார்.

அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.

இயேசு இப்போது பிலிப்பை நோக்கி: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உன்னோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பதே ஆகும். அப்படியிருக்க, தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று கேட்கிறாயே..? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை.

என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.

ஏனெனில், நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்” என்றார்.

கடவுளாகிய தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவை பிலிப்பு புரிந்துகொள்ளவில்லை. தந்தை வேறு, இயேசு வேறு என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால், பிலிப்புவின் தவறான பார்வையை இயேசு திருத்தினார். தந்தையால் அனுப்பப்பட்டு இயேசு இவ்வுலகுக்கு வந்தவர்; இந்த உண்மை மனித அறிவுக்கு எட்டாததாகத் தெரியலாம்.

ஆனால், இயேசுவின் சொற்களைக் கேட்டு, அவரிடத்தில் நம்பிக்கை கொள்வோர் அவர் எடுத்துக்காட்டிய இந்த உண்மையை ஏற்றுக்கொள்வார்கள். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையே அஸ்திவாரம்.

தந்தைக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு எந்த அளவு நெருக்கமானது என்றால் “என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என இயேசு கூறுகிறார். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டால் இயேசு நமக்குக் காட்டுகின்ற வழியே கடவுள் நமக்கு அளிக்கின்ற வாழ்வுமுறை என்பதைக் கண்டறிவோம்.

அப்போது இயேசுவின் தந்தையும் நம் தந்தையுமாகிய கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மைத் தம்மோடு எந்நாளும் நிலைவாழ்வில் பங்குபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்வோம். இந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால் இயேசுவின் பெயரால் கேட்பதை அவர் செய்வார் என்னும் உறுதி நமக்கு உண்டு. இத்தகைய உறுதியை நமக்கு அளிப்பவர் இயேசு.

தொடர்புடைய செய்திகள்

1. இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.