ராகு-கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம்


ராகு-கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம்
x
தினத்தந்தி 31 Aug 2020 11:00 PM GMT (Updated: 31 Aug 2020 7:54 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம். இங்கு பாம்புபுரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற, தென்கரை தலங்களில் 59-வது தலம் என்று சிறப்பு இந்தக் கோவிலுக்கு உண்டு. மேலும் இந்தக் கோவில் மிகச் சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலில் உள்ள இறைவனை, ஆதிசேஷன், ராகு மற்றும் கேது, அஷ்டமா நாகங்கள் ஆகியோர் சிவராத்திரியின் மூன்றாம் ஜாமத்தில் வழிபட்டு தங்கள் சாபங்களில் இருந்து விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் கோவிலில் பாம்புபுரேஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவனும், வண்டார் பூங்குழலியம்மை என்ற பெயரில் இறைவியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

ஒரு முறை கயிலாயத்தில் இருந்த சிவபெருமானை, விநாயகப்பெருமான் வழிபட்டார். அப்போது ஈசனின் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன், உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் தன்னுடைய சக்தியை இழக்கும் படி சபித்தார். இதனால் உலகத்தைத் தாங்கக்கூடிய ஆதிசேஷன், ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக இனங்கள் அனைத்தும் தங்களின் சக்தியை இழந்து தவித்தன. இதையடுத்து அவர்கள் அனைவரும் ஈசனை வேண்டி பரிகாரம் கேட்டனர்.

அதற்கு ஈசன், “அனைவரும் பூலோகத்தில் உள்ள சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் சென்று, சிவராத்திரி நாளன்று என்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார். அதன் படியே ஆதிசேஷன் தலைமையில் நாக இனங்கள் அனைத்தும், சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புநாதரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

திருப்பாம்புரம் கோவிலின் ராஜகோபுரம், மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் காணப்படுகிறது. மூலவர் சேஷபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார். பூங்குழலி அம்மையின் சன்னிதியும் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கிறது.

இது ஒரு ராகு - கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம் ஆகும். கும்பகோணம், திருநாகேஸ்வரம், காளகத்தி, கீழப்பெரும்பள்ளம், நாகூர் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் வழிபட்ட பலன், திருப்பாம்புரம் தலம் ஒன்றை தரிசித்தாலே கிடைக்குமாம். இங்கு ராகுவும் கேதுவும் ஓருடலாக இருந்து, சிவபெருமானை தங்களின் நெஞ்சில் வைத்து வழிபட்ட தலமாகும். எனவே ராகு-கேது பரிகாரத் தலங்களில், இது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள், 18 வருட ராகு தசை நடப்பவர்கள், 7 வருட கேது தசை நடப்பவர்கள், ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருப்பவர்கள், ராகு புத்தி அல்லது கேது புத்தி நடப்பவர்கள், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடை இருப்பவர்கள், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் பூசாரிகள் சொல்லும் பரிகாரங்களைச் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம். சிலர், ராகு -கேது தோஷங்கள் நீங்க, கல்லால் ஆன நாக வடிவங்களை இந்தக் கோவிலில் உள்ள வன்னி மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 7 கிலோமீட்டர் தூரம் சென்றால், திருப்பாம்புரத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் கற்கத்தி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றாலும் திருப்பாம்புரம் திருத்தலத்தை அடைய முடியும். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

Next Story