பிறவிப்பிணி அகற்றும் தீபாவளி வழிபாடு


பிறவிப்பிணி அகற்றும் தீபாவளி வழிபாடு
x
தினத்தந்தி 10 Nov 2020 6:27 PM GMT (Updated: 2020-11-10T23:57:35+05:30)

சிவபெருமானுக்கு ஐந்து வகையான வனங்களை குறிப்பிடும் வகையில் ‘பஞ்சாரண்ய தலங்கள்’ இருக்கின்றன.

சிவபெருமானுக்கு ஐந்து வகையான வனங்களை குறிப்பிடும் வகையில் ‘பஞ்சாரண்ய தலங்கள்’ இருக்கின்றன. ‘ஆரண்யம்’ என்றால் ‘காடு’ என்று பொருள். ‘பஞ்சாரண்யம்’ என்றால் ‘ஐந்து வகை வனங்கள்’ என்று பொருள்படும். முல்லை வனமாக கருதப்படும் ‘திருக்கருகாவூர்’, பாதிரி வனமான ‘அவளிவநல்லூர்’, வன்னி வனமாக கருதப்படும் ‘அரதைப்பெரும்பாழி’ என்னும் ‘அரித்துவாரமங்கலம்’, பூளை வனமான ‘இரும்பூளை’ என்னும் ‘ஆலங்குடி’, வில்வ வனமாக கருதப்படும் ‘திருக்களம்பூர்’ ஆகியவையே பஞ்சாரண்ய தலங்களாகும்.

முதலாவதாகத் தரிசிக்க வேண்டிய ஆலயம், தப்பாமல் குழந்தைவரம் தரும் திருக்கருகாவூர். உஷத் காலமாகிய காலை 5 மணி முதல் 6 மணிக்குள், திருக்கருகாவூர் கருக்காத்த நாயகி உடனாய முல்லை வனநாதர் கோவிலில் வழிபட வேண்டும். காலசந்தி பூஜை நேரமான காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள், அவளிவநல்லூர் சவுந்தர்யநாயகி உடனாய சாட்சிநாதர் கோவிலில் வழிபட வேண்டும். உச்சிகால பூஜை நேரமான பகல் 11 மணி முதல் 12.30 மணிக்குள், அரித்துவாரமங்கலம் அலங்காரவல்லி உடனாய பாதாளேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். சாயரட்சை பூஜை நேரமான மாலை 5 மணி முதல் 6 மணிக்குள், ஆலங்குடி ஏலவார்குழலி உடனாய ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வழிபட வேண்டும். அர்த்தஜாம நேரமான இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள், திருக்களம்பூர் சவுந்தர்யநாயகி உடனாய வில்வவனநாதர் கோவிலில் வழிபட வேண்டும். இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் மேற்சொன்ன முறைப்படி வழிபாடு செய்து வந்தால் சகல வளங்களும் பெறலாம் என்பது முன்னோர்கள் வாக்கு.

இந்தத் தலங்களில் ஒன்றான திருக்கொள்ளம்புதூர் என்னும் திருக்களம்பூரில், திருஞானசம்பந்தருக்காக தீபாவளி அன்று நடு இரவில் நடக்க வேண்டிய அர்த்தஜாம பூஜையை, மறுநாள் அதிகாலை உஷத் காலத்தில் சிவபெருமான் ஏற்று அருளியுள்ளார். அந்த கதை என்ன என்பதை தெரிந்துகொள்வோம்..

ஒரு தீபாவளி நன்னாளில், ஐப்பசி மாத அமாவாசை அன்று பஞ்சாரண்ய தலங்களில் முதல் நான்கு தலங்களை தரிசித்தார், திருஞானசம்பந்தர். அன்று அர்த்தஜாம பூஜைக்கு, திருக்களம்பூர் ஈசனைக் காண வந்தார். ஐப்பசி அமாவாசை தீபாவளி இரவில் சம்பந்தர் வருவதை அறிந்த மக்கள் ஊரெங்கும் வீடுகளிலும், வெளியிலும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து சம்பந்தரின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் சம்பந்தர் வரும் வழியில் கடும்மழை. இதனால் வழியில் குறுக்கிடும் அகத்திய காவிரி (முள்ளியாறு) என்னும் வெட்டாற்றில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆகையால் திருஞானசம்பந்தரால் அந்த ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியவில்லை. பெரும் வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் ஓடத்தை செலுத்த முடியாததால், ஓடங்கள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேரமும் அந்திசாய்ந்து இரவு பூத்து நள்ளிரவும் வந்தது. ஈசனை தரிசிக்காமல் செல்லக்கூடாது என்பதில் திருஞானசம்பந்தர் உறுதியாய் இருந்தார். எனவே ஆற்றின் கரையில் நிறுத்தியிருந்த ஓடம் ஒன்றில் அந்த நள்ளிரவிலும் தன் அடியவர்களுடன் ஏறினார் சம்பந்தர். ஓடத்தை ஆற்று நீரில் செலுத்த துடுப்பு இல்லை. ஆனா லும் ஓடம் சென்றது. ஆம்.. சம்பந்தர் கூறிய பஞ்சாட்சரமும், அவர் பாடிய பதிகமும், வெள்ளத்தின் ஊடே துடுப்பு இன்றி ஓடம் பயணிக்க துணை நின்றன.

அந்தப் பாடல் ஈசனை உருக்க, ஈசனின் அருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அதிகாலையில் அடைந்தது. ஆற்றின் கரையிலேயே ஈசன் உமையுடன் ரிஷப வாகனத்தில் சம்பந்தருக்கும், அவரது அடியார்களுக்கும் அந்த அதிகாலையில் காட்சி கொடுத்தார். பின்பு சம்பந்தர் மீதி பதிகத்தை பாடியபடியே திருக்கொள்ளம்புதூர் ஆலயத்தை அடைந்தார். அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் தீபாவளி அமாவாசை நாளில் ஏற்றிய அகல்விளக்குகளை அணையாமல் சம்பந்தர் மறுநாள் அதிகாலை தங்கள் ஊர் வரும்வரை ஏற்றிவைத்து காத்திருந்தனர். சம்பந்தர், மக்கள் அனைவரையும் ஆசிர்வதித்து திருக்கொள்ளம்புதூர் ஆலயத்தினுள் சென்றார். ஆலய அர்ச்சகர்களும் தீபாவளி அமாவாசை நாளில் சம்பந்தரின் வருகையை அறிந்து இரவில் காத்திருக்க, நேரம் செல்லச் செல்ல சம்பந்தர் வராததால் கலக்கமுற்றனர். ஆனால் சம்பந்தர் வரும்வரை காத்திருக்குமாறு ஈசன் அவர்களுக்கு அசரீரியாக கூறியதால், தீபாவளி அமாவாசை அர்த்த ஜாம பூஜைக்கான நள்ளிரவு நேரம் கடந்து விட்ட போதிலும் பூஜையை தள்ளி வைத்திருந்தனர்.

திருஞானசம்பந்தர் வருவதற்கு மறுநாள் அதிகாலை ஆகிவிட்டது. சம்பந்தருக்காக தீபாவளி அமாவாசை அர்த்த ஜாமபூஜையானது, மறுநாள் அதிகாலையில் நடந்தேறியது. இன்றும் கூட தீபாவளி அமாவாசை இரவில் நடக்க வேண்டிய அர்த்த ஜாமபூஜை, இந்த ஆலயத்தில் மறுநாள் அதிகாலையில்தான் நடத்தப்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தர் திருக்கொள்ளம்புதூருக்கு எழுந்தருளிய சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, தீபாவளி அமாவாசையில் ‘ஓடத் திருவிழா’ இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓடத் திருவிழாவில் கலந்து கொண்டால் வாழ்வில் அனைத்து ஐஸ்வரியங் களும் தவறாமல் கிடைக்கும் என்பது ஐதீகம். சம்பந்தர் ஓடம் செலுத்திய வெட்டாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடினால் வாழ்வில் இன்னல்கள் அகன்று இன்பங்கள் வந்தடையும்.

அமைவிடம்

தஞ்சாவூரில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, திருக்கொள்ளம்புதூர் திருத்தலம். இங்கு செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

Next Story