தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்... ஐந்து நாட்கள்.. ஐந்து கதைகள்...


தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்... ஐந்து நாட்கள்.. ஐந்து கதைகள்...
x
தினத்தந்தி 14 Nov 2020 7:54 AM GMT (Updated: 2020-11-14T13:24:26+05:30)

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்... ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இதற்கு ஐந்து கதைகள் கூறப்படுகிறது

தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை வித்தியாசமாக 5 நாட்கள் கொண்டாடுகிறார்கள். அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையும் இருக்கிறது. அதன் விவரம்!

1. தந்திராஸ் : மன்னர் ஹிமாவின் மகன் தனது 16 வயதில், அதுவும் திருமணமான 4-வது நாளில் பாம்பு கடித்து இயற்கை எய்துவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது. எப்படியாவது தனது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த இளவரசனின் புது மனைவி, பாம்பு வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை ஏற்றி வைத்தாள். வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் தங்க, வைர, வைடூரிய நகைகள், பொற்காசுகள், நவரத்தினங்களை கொட்டி வைத்தாள். அவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து அரண்மனையே பிரகாசித்தது.

குறிப்பிட்ட நேரத்தில் இளவரசனின் உயிரை எடுப்பதற்காக எமன் பாம்பு வேடம் தரித்து உள்ளே வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின் கண்கள் செயலிழந்துவிட்டது. அதனால் இளவரசன் இருந்த இடத்துக்கு செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டு கொண்டே இருந்தது. அதற்குள் விடிந்து விட்டது. 4-வது நாள் முடிந்து விட்டதால் பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இளவரசியின் தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப்பட்டதால் அந்த நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்கள். இது தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும்.

அன்றைய தினம் பெண்கள் வீடு முழுவதையும் அலங்கரித்து விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் நீண்ட நாள் வாழ பூஜை செய்வார்கள். நன்கு பிசையப்பட்ட மாவில் தீபம் ஏற்றி, எமனுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். இந்து மரபுப்படி அழித்தல் தொழிலை செய்துவரும் எமனை, தனந்த்ரயோதஷி (தந்திராஸ்) தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தால் ஆண்களுக்கு ஆசி வழங்கி நீண்ட ஆயுள் கொடுப்பார் என்பது ஐதீகம்.

2. நரக சதுர்த்தி : இது தீபாவளிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது. நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவனது சொர்க்க ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான். 16 ஆயிரம் பெண்களையும் சிறை பிடித்தான். தேவேந்திரனின் தாய் அதிதி அணிந்திருந்த மந்திர சக்தி கொண்ட கம்மலையும் எடுத்து சென்று விட்டான். இதனையடுத்து தேவர்கள் தங்களை காக்க வேண்டி மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைந்து அபயம் கேட்டனர். அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்த மகாவிஷ்ணு நரகாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று தேவர்களையும், மக்களையும் காத்தார். நரகாசுரன் தேவலோகத்தில் இருந்து சிறைபிடித்து சென்ற பெண்களையும் விடுவித்தார். அதிதியின் மந்திர சக்தி கொண்ட கம்மலையும் மீட்டார். உலக மக்களை பயத்தில் இருந்து நீக்கிய அந்த நாளையே நரக சதுர்த்தி தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

3. பெரிய தீபாவளி : இதுதான் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை. நரகாசுரன் இறந்ததையடுத்து அதிகாலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் இனிப்பு சாப்பிட்டு பட்டாசுகளை வெடித்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதை லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் தான் 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதாக நம்பப்படுகிறது. ராமர், சீதையுடன் அயோத்தி திரும்பிய மகிழ்ச்சியின் வெளிப்பாடே பெரிய தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதேபோல பெரிய தீபாவளி நாளில் செல்வத்தின் கடவுளான லட்சுமி வீட்டுக்கு வந்து நேரடியாக அருள்புரிவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ, அவர் வீட்டுக்குத்தான் லட்சுமி வருவார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

எனவே பெரிய தீபாவளி தினத்தன்று வீட்டை சுத்தப்படுத்தி விளக்குகளால் அலங்கரித்து லட்சுமியை வரவேற்கும் விதமாக பூஜை செய்வார்கள். இதனைத்தொடர்ந்து ‘தீபாவளிச்சா பட்வா’ என்ற விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி பெண்கள் கணவன்மார்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டி ஆலமரத்தில் நூல் கட்டி, சுற்றி வந்து வழிபட்டு சிறப்பு பூஜை செய்வார்கள்.

4. கோவர்த்தன பூஜை : நாளை இந்த விழா கொண்டாடப்படுகிறது. ராமன் பாலம் கட்டியபோது அனுமான் கோவர்த்தன மலையை தூக்கி சென்றாராம். அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டதால் ஓரிடத்தில் அந்த மலையை வைக்கும்போது என்னை ஏன் இங்கே வைத்து விட்டு செல்கிறாய் என்று அனுமானிடம் அந்த மலை கேட்டது. அதற்கு, ராமர் அடுத்து கிருஷ்ண அவதாரம் எடுத்து உன்னை தூக்குவார். அதுவரை இங்கேயே காத்திரு என்று அனுமான் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்படி மலையை தூக்கி பிடித்து மக்களுக்கு காட்சியளித்ததையே கோவர்த்தன பூஜையாக கொண்டாடுகிறார்கள்.

தேவலோக அரச பதவியில் இருந்த இந்திரன் கர்வம் கொண்டிருந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர், இந்திரனுக்கு செய்யும் யாகத்தை தடுத்து நிறுத்தி ஆயர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் கோவர்த்தன மலைக்கு பூஜை செய்து விழா எடுக்க கூறினார். இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன் ஆயர் குலத்து மக்களையும், ஆலோசனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். கிருஷ்ணர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை மறந்த இந்திரன் வர்ணதேவனை அழைத்து மேகங்களை திரட்டி கடும் மழையை பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான்.

அப்போது, கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தாங்கி மக்களுக்கு குடையாக பிடித்து மக்களை காத்தார். தனது தோல்வியை உணர்ந்த இந்திரன் மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதார மகிமையை உணர்ந்து கர்வம் அழிந்தான். இந்த நாளில் வீட்டிலேயே மலை போன்று வடிவங் களை அமைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவார்கள்.

5. ‘பாவ்-பீச்’ விழா : நரகாசுரனை கொன்று விட்ட மகிழ்ச்சியில் இருந்த கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார். அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டு வரவேற்றார். இந்த நாளை பாவ்-பீச் விழாவாக கொண்டாடுகின்றனர். அன்று சகோதரர்கள் தங்களது சகோதரிகள் வீடுகளுக்கு சென்று அவர்களை நலம் விசாரித்து அகம் மகிழ்வார்கள்.

Next Story