ஒரு வார்த்தை போதும்


ஒரு வார்த்தை போதும்
x
தினத்தந்தி 30 Nov 2020 10:00 PM GMT (Updated: 2020-11-30T23:31:40+05:30)

ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர்.

நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். இயேசுவை நோக்கி... “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

Next Story