வள்ளி திருமணம் நடந்த ஆதி திருவேரகம்


வள்ளி திருமணம் நடந்த ஆதி திருவேரகம்
x
தினத்தந்தி 30 Nov 2020 10:45 PM GMT (Updated: 2020-11-30T23:41:33+05:30)

வேளிமலை குமாரசுவாமி திருக்கோவிலில், வள்ளி திருமணம் பங்குனி மாதத்தில் நடைபெறும்.

சூரபதுமனை வென்று தெய்வானையை கரம்பிடித்த முருகப்பெருமான், அதன்பிறகு வள்ளியை காதல் திருமணம் செய்து கொண்ட புண்ணியத் தலமாக வேளிமலை குறிப்பிடப்படுகிறது. இங்கு பங்குனி மாதத்தில் நடைபெறும் வள்ளி திருமண விழாவுக்கு வரும் அடியவர்களுக்கு, அப்போது தேன், தினைமாவு, லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. முருகனுக்கும், வள்ளி குறத்திக்கும் காதல் வேள்வி நடந்த மலை என்பதால் இது ‘வேள்விமலை’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி ‘வேளிமலை’ என்றானது.

திருமண பருவமான குமார பருவத்தில் முருகபெருமான் இங்கு குடிகொண்டதால், ‘குமாரகோவில்’ என இத்தலம் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. ‘ஏரகம்’ என அழைக்கப்பட்ட வேளிமலையில் தான் முருகன் வேடனாகவும், முதியவராகவும் வந்து வள்ளியை மணமுடித்ததாக புராணக் கதை கூறுகிறது. முருகனை மணம் முடிக்க வள்ளிதேவி சம்மதம் தெரிவித்தாள். ஆனால் அதற்கு அவளது பெற்றோரும், சகோதரர்களும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் முருகப்பெருமானுடன் அவர்கள் அனைவரும் போரிட்டனர். இந்த போரின் இறுதியில் முருகப்பெருமானிடம் தோல்வி கண்ட வள்ளிதேவியின் உறவினர்களுக்கு, முருகப்பெருமான் தன் சுய உருவத்தில் காட்சியளித்தார். அதன் பிறகு வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

இதற்கு சான்றுகளாக வேளிமலையில் வள்ளிகுகை, கல்யாண மண்டபம், வள்ளிசுனை, வள்ளிகாவு போன்றவை இன்றும் காட்சி தருகின்றன. குமாரகோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மலையின் மேல்பகுதியில், திருக்கல்யாண மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு அமைந்துள்ள ஒரு சிறு குகையில் வள்ளியம்மனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலை யில் இருந்து வள்ளிதேவியோடு முருகப்பெருமான் வரும் போது உறவினர்கள் சண்டை போடும் சம்பவத்தை இப்போதும் குறவர் இன மக்கள் நினைவுபடுத்தி வருகின்றனர். வள்ளி திருமணம் நிகழ்ச்சியின் போது ‘குறவர் படுகளம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

கருவறையில் 8 அடி உயர முருகப்பெருமானின் இடதுபுறத்தில் வள்ளி தேவி காட்சியளிக்கிறார். வள்ளி சிலை 6 அடி உயரமாகும். கருவறைக்கு அருகே சிவன் சன்னிதி உள்ளது. நந்தீஸ்வரரின் உருவமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடராஜர் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். கோவிலில் ஸ்ரீதர்ம சாஸ்தா, கல்யாண விநாயகர், இளைய நயினார், ஆறுமுகநயினார், மகாதேவர் சன்னிதிகளும் உள்ளன.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் வேளிமலை குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வேளிமலை குமாரசுவாமி திருக்கோவிலில் பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. சுடலையாண்டி சித்தர், கோனார் சித்தர் என்னும் இரு சித்தர் சமாதிகளும் இங்கு உள்ளன. ஆதி திருவேரகம் என்றும் இந்த ஆலயத்தை அழைக்கிறார்கள்.

Next Story