சிவபெருமானுக்கு இருக்கும் 64 வடிவங்களைப் போல, பைரவருக்கும் கூட 64 விதமான தோற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் அஷ்ட பைரவர்களின் வடிவம் மிகவும் பிரசித்திப்பெற்றது. பைரவ மூர்த்தி காவல் தெய்வமாக பார்க்கப்படுகிறார். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதிகள் இவருக்குரிய வழிபாட்டு தினமாக இருக்கிறது. எல்லாத அஷ்டமி திதிகளையும் விட, கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி திதியானது, ‘மகாதேவ அஷ்டமி’யாக வழிபடப்படுகிறது.
பைரவரின் திருவுருவத்தில் நவக்கிரகங் களும், பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச் சன்னிதியில், கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவன் கோவில்களில் இரவு பூஜை முடிந்த பின் சன்னிதிகளைப் பூட்டி சாவியைக் கால பைரவர் காலடியில் வைத்து வீடு செல்வார்கள். மறுநாள் அதிகாலையில் அந்தச் சாவிகளை எடுத்து சன்னிதி திறந்து பூஜைகள் செய்யத் தொடங்குவர். ஏனெனில் கால பைரவரே, சிவாலயத்தின் காவல்தெய்வம் என்ற நம்பிக்கை உள்ளது.
பாம்பைப் பூணுலாகக் கொண்டும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், ஆகியவற்றை கையில் ஏந்தியும் பைரவர் காட்சி தருவார். கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலத்திலும் பூஜை செய்வது சிறப்பானது. அமாவாசை மற்றும் பவுர்ணமி ஆகிய திதிகளுக்கு அடுத்த எட்டாம் நாளான அஷ்டமி திதியன்று, கால பைரவரை வணங்க உகந்த நாட்களாகும். அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவற்றைச் செய்யலாம். கால பைரவரை வணங்கினால் உடைமைகள் கூடக் களவு போகாது என்பது ஐதீகம்.
அஷ்டமி திதியில் மட்டுமல்லாது ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். பைரவர், வாழ்க்கையில் வறுமை வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். சொர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வழிபடலாம். மேலும் வடைமாலை அணிவித்தும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்தும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். நீண்ட நாட்கள் வறுமையில் இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவர்.
வேலூர் அருகே உள்ள வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவரும், ஒரு கல்லில் மகா பைரவரும் வீற்றிருக்கின்றனர். அதே போல் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்ட அஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் தன்வந்திரி பீடத்தில் செய்யப்படுகிறது.