இசையால் ஈசனை வசப்படுத்திய நாயனார்


இசையால் ஈசனை வசப்படுத்திய நாயனார்
x
தினத்தந்தி 7 Dec 2020 10:30 PM GMT (Updated: 7 Dec 2020 5:56 PM GMT)

சோழ வள நாட்டில் அமைந்த ஊர் திருமங்கலம். இங்கு இடையர் குலத்தில் அவதரித்தவர், ஆனாயர்.

இவர் தன்னுடைய இல்லத்தில் இருந்த மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி செல்வதற்கு முன்பாக தினந்தோறும் சிவபெருமானை வணங்கி, உடல் முழுவதும் திருநீறு பூசி விட்டுதான் புறப்பட்டுச் செல்வார். மேலும் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது, சிவபெருமானின் பூஜைக்கு பஞ்சகவ்யத்தை வழங்கும் மாடுகளை, பசு, காளை, கன்று என்று வகை வகையாக பிரித்து மேய வைப்பார். அவை புல் மேய்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஆனாயர், தன்னுடைய புல்லாங்குழலை வாசிப்பார். அந்த புல்லாங்குழல் இசையில் இருந்து ‘ஓம் நமசிவாய’ என்ற நாதமும் வெளிப்படும்.

கிருஷ்ணரைப் போலவே, இடையராக பிறந்த ஆனாயரும் புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவராக இருந்தார். இவரது இசை, பசுக்களை காப்பதற்கு துணை செய்வதாக அமைந்திருந்தது. அவரது இசையைக் கேட்டு ஆவினங்கள் அனைத்தும், குறிப்பிட்ட எல்லையை கடந்து செல்லாது. அப்படியே எல்லையைக் கடந்து சென்ற ஆவினங்கள் கூட, ஆனாயரின் இசை கேட்டு, அவர் இருப்பிடம் நோக்கி வந்துவிடும்.

ஒருநாள் திருநீறு அணிந்துக்கொண்டு ஆவினங்களுடன் முல்லை நிலத்திற்கு சென்றார், ஆனாயர். அது ஒரு மழைக்காலம். முல்லை மலர் பூத்து நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. அங்கு பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவப்பெருமானை கண்டார், ஆனாயர். அந்த பக்தி பரவசத்தில் தன்னுடைய புல்லாங்குழலை எடுத்து வாசிக்கத் தொடங்கினார். பஞ்சாட்சரம் என்னும் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்பது அந்த இசையில் இருந்து வெளிப்படுகிறது.

எட்டுத்திக்கிலும் அந்த குழலோசை எதிரொலிக்கின்றது. குழல்ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நின்றன. இளங்கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே அசைவற்று கிடந்தன. அங்கே காணப்பட்ட எருதுகளும், மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நின்று கவனித்தன. ஆடுகின்ற மயில்களும், காற்றும், மலர்களும் கூட ஆடாமல், அசையாமல் லயித்து நின்றன. ஆனாயரின் குழலில் இருந்து வெளிப்பட்ட ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணில் மட்டுமின்றி, விண்ணிலும் ஒலித்தது. அதைக் கேட்ட தேவர்கள் கூட அங்கே வந்து கூடிவிட்டனர்.

அவரது இசைக்கு மயங்கி தேவலோகமே வந்துவிட்டதால், ஈசனும் தன் உமையான பார்வதியோடு ரிஷப வாகனத்தில் வந்து ஆனாயருக்கு காட்சி கொடுத்தார். பின்னர் “உன்னுடைய இசையை நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதனால் நீ என்னுடனேயே வந்து விடு” என்று அவருக்கு மோட்சமளித்து தன்னுடன் அழைத்துச் சென்றார். அதன்படி ஆயனாரும் இறைவனடி சேர்ந்தார்.

ஆயனார் திருவிளையாடல் நடந்த திருமங்கலம் என்ற திருத்தலம், லால்குடி ரெயில் நிலையத்தில் இருந்து பூவாலூர் வழியே வடமேற்கில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிவபெருமானை வணங்கி பரசுராமன் ‘பரசு’ என்ற ஆயுதத்தை பெற்றார். இங்கு கோவிலுக்குள் உள்ள உட்சுற்றில் வடமேற்கே ஆனாயர் சிவப்பேறு எய்திய இடம் இருக்கிறது. அங்கே ஆனாய நாயனாருக்கு தனிக்கோவில் அமைந்துள்ளது. நாயனார் கொன்றை மரத்தின் நிழலிலே நின்று புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் மிக அழகான சிற்பமும் காணப்படுகிறது.

Next Story