சிவலிங்கமாக மாறிய பட்டினத்தார்


சிவலிங்கமாக மாறிய பட்டினத்தார்
x
தினத்தந்தி 7 Dec 2020 11:30 PM GMT (Updated: 2020-12-08T00:44:49+05:30)

கோடி கோடியாக பணம் சேர்த்து, மாடி மேல் மாடி கட்டினாலும், இறுதியில் காதற்ற ஊசி கூட உடன் வராது என்பதை உலகுக்கு உணர்த்தியவர், பட்டினத்தார்.

 இவரைப் பற்றி நினைத்தாலே, இடுப்பு துணியோடு, கரும்பை கையில் பிடித்திருக்கும் சித்தர் பெருமானின் உருவம் நம் மனக் கண்ணில் வந்துபோகும்.

காவிரிப்பூம்பட்டினம் வணிகர்கள் நிறைந்த பகுதி. அங்கு வாழ்ந்த பெரும் வணிகரான சிவநேசர்-ஞானகலை தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியர் திருவெண்காடு ஈசனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பதால், தங்கள் பிள்ளைக்கு ‘சுவேதனப் பெருமான்’ என்று பெயரிட்டனர். ‘திருவெண்காடார்’ என்றும் அழைத்தனர்.

பிறந்தது முதலே செல்வச் செழிப்பில் வளர்ந்தவர் திருவெண்காடார். உரிய பருவத்தில் சிவகலை என்ற பெண்ணை திருமணம் செய்தார். முன்னதாக அவரது சகோதரிக்கும் திருமணம் முடிந்திருந்தது. திருவெண்காடார் - சிவகலை தம்பதிக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் திருவிடைமருதூர் சென்று ஈசனை வழிபட்டு விரதம் இருந்து வந்தனர்.

திருவிடைமருதூரில் சிவசருமன்- சுசீலை தம்பதியர் வறுமையில் இருந்து வந்தனர். சிவசருமன் கனவில் தோன்றிய ஈசன், தான் கோவில் நதிக்கரையில் மருத மரத்தின் அடியில் குழந்தையாக இருப்பதாகவும், அதை எடுத்துச் சென்று, காவிரிப்பூம்பட்டினத்தின் பெரு வணிகரான திருவெண்காடாரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். மேலும் அவர் தரும் பொருளைப் பெற்று வறுமையில் இருந்து விடுபடும்படியும் அருளினார்.

ஈசன் சொன்னபடியே, குழந்தையை எடுத்துச் சென்று திருவெண்காடாரிடம் ஒப்படைத்தார் சிவசருமன். கைமாறாக அவர் கொடுத்த பொருளைப் பெற்றுக்கொண்டார். மருத மரத்தடியில் கிடைத்த குழந்தை என்பதால் அதற்கு ‘மருதவாணன்’ என்று பெயரிட்டு திருவெண்காடார் தம்பதியர் வளர்த்து வந்தனர்.

மருதவாணன் வளர்ந்ததும், தன்னுடைய வணிகத் தொழிலை தன் மகனுக்கும் சொல்லிக் கொடுத்தார், திருவெண்காடார். ஒரு முறை கப்பல் மூலமாக வெளிநாடு சென்ற மருதவாணன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருவெண்காடார். ஆனால் மருதவாணனுக்கு பதிலாக ஒரு சிறு ஓலையும், காது இல்லாத ஊசியும்தான் வந்தது. அவர் சென்று வந்த கப்பலிலும் கூட எருவின் வரட்டியும், தவிடும்தான் நிரம்பி இருந்தது.

இதைக் கண்டு கோபம் கொண்ட திருவெண்காடார், மகன் கொடுத்த ஓலையில் இருந்த வாசகத்தைப் படித்தார். அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் திருவெண்காடாருக்கு தூக்கிவாரிப்போட்டது. இதுநாள் வரை தன்னுடன் வராத செல்வத்தைத் தேடி அலைந்ததை நினைத்து வருந்தினார். உடனடியாக துறவியாக மாறிப்போனார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், அவரை அனைவரும் ‘பட்டினத்தார்’ என்று அழைத்தனர்.

சொத்துக்களை துறந்து சிவாலயங்கள் தோறும் சென்று வந்தார், பட்டினத்தார். அப்படி சென்றபோதுதான் பத்திரகிரியார் என்னும் அரசனை தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொண்டார். ஆனால் பட்டினத்தாருக்கு முன்பாகவே, பத்திரகிரியாருக்கு முக்தியை அருளினார், சிவபெருமான். இதனால் தனக்கும் முக்தி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண் டினார், பட்டினத்தார். ஆனால் ஈசனோ, அவரது கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, “இந்தக் கரும்பின் நுனி எந்த ஆலயத்தில் இனிப்பாக இருக்கிறதோ, அங்கு உனக்கு முக்தியைத் தருகிறேன்” என்று கூறிவிட்டார்.

இதையடுத்து கையில் கரும்போடு பல ஆலயங்கள் சுற்றி வந்த பட்டினத்தார், இறுதியில் திருவொற்றியூர் திருத்தலத்திற்கு வந்தபோது அவரது கையில் இருந்த கரும்பின் நுனிப்பகுதி இனிப்பு சுவையை கொடுத்தது. இதையடுத்து தன் அடியார்களிடம் தன்னை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து மூடிவிடும்படி பட்டினத்தார் உத்தரவிட்டார். அவர்களும் அப்படியே செய்தனர். உள்ளே சென்ற பட்டினத்தார், சிவலிங்கமாக மாறியிருந்தார். ஈசன் அவருக்கு முக்தியை அருளினார்.

முக்தி அடைந்த பட்டினத்தாரின் திருக்கோவில், திருவொற்றியூரில் வங்கக்கடலை நோக்கியபடி அமைந்துள்ளது. கோபுரங்கள் எதுவும் இன்றி தனிக்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டினத்தார், சிவலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். இந்த லிங்கத்திற்கு, அவரது குரு பூஜை தினத்தில் எண்ணெய், கரும்புச்சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பட்டினத்தாரை வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.

பட்டினத்தார் செய்த அற்புதங்கள்

ஈசனின் அருளால் துறவியாக மாறிய பட்டினத்தார், ஆரம்ப காலங்களில் தனது சொந்த ஊரிலேயே இருந்து வந்தார். ஆனால் சொத்துக்களின் மீது பற்று இல்லாமல் இருந்தார். அதனால் அந்த சொத்துக்களை அவரது சகோதரியும் அனுபவித்து வந்தார். தன் சகோதரன் மீண்டும் மனம் மாறி வந்துவிட்டால், சொத்துக்கள் பறிபோய் விடுமே என்று அச்சப்பட்ட பட்டினத்தாரின் சகோதரி, அவருக்கு அப்பத்தில் விஷத்தை தடவிக் கொடுத்தார். அனைத்தையும் அறியும் சக்தியைப் பெற்றிருந்த பட்டினத்தார், அந்த அப்பத்தை வாங்கி வீட்டின் கூரையில் சொருகி வைத்து விட்டு, “தன் வினை தன்னைச் சுடும். ஓட்டு அப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். மறுநொடியே அந்த வீடு பற்றி எரிந்தது. இதனால் அவரது சக்தியை அனைவரும் அறிந்து கொண்டனர்.

அதே போல் தன் தாயிடம், “அம்மா.. நீங்கள் இறந்ததும் உங்களுடைய இறுதிச்சடங்கை செய்ய கண்டிப்பாக வருவேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார், பட்டினத்தார். அதன்படி தாய் இறந்த செய்தி கேட்டதும், அங்கு விரைந்துசென்றார், பட்டினத்தார். அவர் வருவதற்குள் இறுதிச்சடங்கை முடித்துவிட வேண்டும் என்று அவரது உறவினர்கள் அனைவரும் சிதையை மூட்டும் வேலையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டனர். கொள்ளி வைக்கப்போகும் தருணத்தில் அங்கு வந்து விட்ட பட்டினத்தார், சிதை மூட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு, பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்க வைத்து தீ மூட்டினார். அவரது சக்தியின் காரணமாக அந்த பச்சை வாழை மட்டைகள் மளமளவென்று எரிந்தன. ஊராரும் உறவினர்களும் வாயடைத்து போய் நின்றனர். ஆனால் அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார், பட்டினத்தார்.

Next Story