பக்தர்கள் நீராட தடை: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் சிம்ம குளம் திறப்பு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்


பக்தர்கள் நீராட தடை: விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் சிம்ம குளம் திறப்பு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்
x
தினத்தந்தி 13 Dec 2020 3:27 PM GMT (Updated: 13 Dec 2020 3:27 PM GMT)

விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் சிம்ம குளம் திறக்கப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்.

அணைக்கட்டு, 

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை சிம்மகுளம் திறப்பு விழா நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

குழந்தை வரம் வேண்டி பெண்கள் சிம்ம குளத்தில் புனித நீராடி விட்டு ஈரத்துணியோடு தூங்கி எழுந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் அதிகளவில் பெண்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் சிம்மகுளம் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிம்மகுளம், சூரிய தீர்த்தம் மற்றும் பிரம்ம தீர்த்தம் ஆகிய 3 நீர்நிலை தீர்த்தங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகளை செய்தார். இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நடக்கும் கடை ஞாயிறு விழாவில் 3 ஆயிரம் பேர் தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது எனவும் கோவில் செயல் அலுவலர் சசிகுமார் தெரிவித்தார்.

Next Story