இறை நம்பிக்கையில் உறுதியாய் இருங்கள்


இறை நம்பிக்கையில் உறுதியாய் இருங்கள்
x
தினத்தந்தி 15 Dec 2020 12:06 AM GMT (Updated: 15 Dec 2020 12:06 AM GMT)

துயரத்தின் முகமறியாமல் பூமியில் ஒருவர் வாழ்ந்துவந்தார். அவர்தான் யோபு. அவருடைய அந்தஸ்து மலைக் குன்றைப்போல உயர்ந்து நின்றது.

குறைவில்லா சந்தோஷத்தின் காரணமாக ஆரோக்கியம் அவரிடம் விளைக்கைப்போல் ஒளிவீசியது. ஆனந்தமே உருவாக அவரது குடும்பம் பாசத்தில் திளைத்தது. மொத்தத்தில் ஊரும் உறவும் போற்ற அவர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரது வாழ்வில் சோதனைகள் சூறாவளியாகச் சூழ்ந்து தாக்கின.

ஒரே நாளில் தன் ஆஸ்திகள் அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துவிட்டார். திடீரென்று வீசிய சூறாவளிக் காற்று, அவருடைய பிள்ளைகளின் உயிரைப் பறித்துவிட்டுப் போனது. ஆஸ்திகளை இழந்து, அவற்றைவிடவும் உயர்ந்த செல்வம் என்று அவர் எண்ணிக்கொண்டிருந்த தன் பிள்ளைச் செல்வங்களை இழந்து மனம் வெந்து நடைபிணமாக இருந்த வேளையில் அவரை ஒரு கொடிய நோய் தாக்கியது. அந்த நோயின் விளைவாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கொப்புளங்கள் பெருகின. அவை தந்த வலி அவரை சித்திரவதை செய்தது. நோயின் வேதனையைப் பொறுக்க முடியாமல் துடியாய்த் துடித்தார்.

இத்தனை சோதனைகளுக்கு நடுவிலும் கடவுள் மீதான நம்பிக்கையும், ஞானத்தையும் அவர் இழக்கவில்லை, கடவுளைத் திட்டவில்லை. ஆனால் மனதளவில் அவர் உடைந்துபோயிருந்தார். “தீய மனிதர்கள் என்னைவிட சந்தோஷமாக இருக்கிறார்களே (யோபு 21:7-9)” என்று ஏக்கமாகக் கூறினார். கடவுளை நோக்கி “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து வையும் (யோபு 14:13).” என்று அழுது புலம்பினார். யோபு ரொம்பவே நொந்துபோயிருந்தார்.

தான் கஷ்டப்படுவதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும், கடவுளிடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். சோதனை வந்தபோதும் அதை விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்(யோபு 27:5).” என்று யோபு உறுதியாகக் கூறினார்.

இழப்பையும், வேதனைகளையும் துச்சமாக மதித்த யோபுவுக்கு இருந்த அதே மனவுறுதி நமக்கும் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் பரலோகத் தந்தைக்கு உத்தமமாயிருக்க அது உதவி செய்யும். சோதனைகளோ, எதிர்ப்புகளோ, கஷ்டங்களோ எது வந்தாலும் சரி, நம் உத்தமத்தை விட்டு விலகாமல் இருக்க அது நிச்சயம் உதவி செய்யும்.

கடவுளின் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இருந்தாலும், சாத்தானின் சோதனைகளுக்குக் களமாகவும் இது இருக்கிறது. அதில் சிக்கி அவனது அடிமைப் பொறியில் மாட்டிக்கொண்டால் மீண்டு வருதல் அபூர்வம். நம்முடைய சகிப்புத்தன்மையும், உறுதித்தன்மையும் மட்டுமே சாத்தானை எதிர்த்துப்போரிடத் தகுந்த ஆயுதங்கள். சாத்தானால் நாம் சோதிக்கப்படும் காலங்களில் எல்லாம் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும், அது மட்டுமே முக்கியம். சில சமயங்களில் கஷ்டங்களும், சோதனைகளும் நம்மை ஓட ஓட விரட்டுவதுபோல் தோன்றலாம். இனிமேலும் நம்மால் பொறுக்க முடியாததுபோல் தோன்றலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் சகித்திருப்பதற்கு யோபுவின் வாழ்க்கை நமக்கு உயரிய உதாரணம். யோபுவின் உறுதியும், சகிப்புத்தன்மையும், உத்தமத்தன்மையும் இறுதியில் அவரை மீட்டன.

Next Story