சகல பாக்கியங்களையும் வழங்கும் சனிபகவான்


சகல பாக்கியங்களையும் வழங்கும் சனிபகவான்
x
தினத்தந்தி 21 Dec 2020 1:00 AM GMT (Updated: 2020-12-21T06:30:46+05:30)

‘மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்’ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

நல்லது நடக்க வேண்டுமானால், நாம் நவக்கிரகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நாம் சனிபகவான் மீது வைத்தால் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். எனவே தான் ‘மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்’ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

மகரத்திற்கு செல்கிறார்

அப்படிப்பட்ட சனி பகவான் சுபஸ்ரீ சார்வரி வருடம் மார்கழி மாதம் 11-ந் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று பின் இரவு 4.49 (27.12.2020 அதிகாலை) மணியளவில் உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அங்கு 20.12.2023 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார். அவரது அருட்பார்வை கடகம், துலாம், மீனம் ஆகிய ராசிகளில் பதிகின்றது.

இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும்.

தற்சமயம் நவக்கிரகத்தில் சுபகிரமாக விளங்கும் குரு பகவானோடு சனி சேருவதால், வரும் சனிப்பெயர்ச்சி வளம் தரும் பெயர்ச்சியாக அமையும்.

நற்பலன் பெறும் ராசிகள்

இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம்.

பரிகாரங்கள் செய்து பலன்பெற வேண்டிய ராசிகள்: மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம்.

இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக ரிஷப ராசிக்கு அஷ்டமத்துச் சனி விலகுகிறது. கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி விலகுகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரைச்சனி விலகுகிறது. எனவே இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் பொன்னும், பொரு ளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

மிதுனத்திற்கு அஷ்டமத்துச் சனி வருகிறது. துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி வருகிறது. தனுசு ராசிக்கு குடும்பச் சனி வருகிறது. மகர ராசிக்கு ஜென்மச் சனி வருகிறது. கும்ப ராசிக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது.

இந்தச் சனியின் சஞ்சார காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழ் கிறது. 13.11.2021-ல் கும்ப ராசியிலும், 14.4.2022-ல் மீன ராசியிலும், 22.4.2023-ல் மேஷ ராசியிலும் குரு பகவான் சஞ்சரிக்கப் போகின் றார்.

இதற்கிடையில் ராகு-கேது பெயர்ச்சியும் இரண்டு முறை நிகழ இருக்கின்றது. 21.3.2022-ல் மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். பிறகு 8.10.2023-ல் மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள்.

இடையில் சனி பலமுறை வக்ரம் பெறுகின்றார். கும்ப ராசியிலும் சில மாதங்கள் இருக்கின்றார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பன்னிரண்டு ராசிகளுக்கும் பலன்கள் வழங்கப்பட்டிருக் கின்றது.

இயற்கை சீற்றங்கள்

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில், தனது ஆட்சி வீடான மகரத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால், ‘நீதிமான்’ என்று போற்றப்படும் சனியால் மக்கள் நலம்பெற வழிபிறக்கும். அரசாங்கமும், மக்கள் நலமும் வளமும் பெறத் தேவையான உதவிகளை வழங்கும்.

மழை வளம் அதிகமாக இருக்கும். வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு, சூறாவளிக்காற்று, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் செவ் வாய்-சனி சேர்க்கை காலத்திலும், செவ்வாய்- சனி பார்வை காலத்திலும் ஏற்படலாம்.

விவசாயம் சிறப்படைய அரசின் நலத்திட்டங்கள் உதவிகரமாக இருந்தாலும், இயற்கை மாறுபாடுகளை அவ்வப்போது கவனித்து விவசாயப் பணி களை மேற்கொள்வது நல்லது.

நாட்டின் பொருளாதார நிலை ஜூன் மாதத்திற்கு மேல் படிப்படியாகச் சீராகும்.

வெளிநாட்டில் வேலை செய்வோர், வேலை நீக்கம் செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பும் சூழல் அதிகரிக்கலாம்.

சனியின் வக்ர காலத்திலும், செவ்வாய் சனியோடு சம்பந்தப்படும் நேரத்திலும் பக்கத்து நாட்டுப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். இருப்பினும் சனியின் பலத்தால் இந்திய அரசு அதைச் சமாளித்து வெற்றி காணும் சூழ்நிலையும் ஏற்படும்.

வளர்ச்சி தரும் வழிபாடு

ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சந்திரனை சனி நெருங்கும் போது ஏழரைச்சனி தொடங்குகிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழரைச்சனி தொடங்கும் போது, அதுமுதல்சுற்றா, இரண்டாவது சுற்றா, மூன்றாவது சுற்றா என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருசிலருக்கு நான்காவது சுற்று வரலாம். இதில் முதல்சுற்று- மங்கு சனி, இரண்டாவது சுற்று- பொங்கு சனி, மூன்றாவது சுற்று- இறுதிச்சனி என்பார்கள். பொங்கு சனிக்காலத்தில் சனி நன்மை செய்யும் என்பது பொது விதி.

அனைத்து ராசிக்காரர்களும், சனிப்பெயர்ச்சியின் விளைவாக சந்தோஷங்களை வரவழைத்துக் கொள்ள, சனி பெயர்ச்சியாகும் நாளில் சனி பகவானை வழிபடுவது நல்லது. அத்துடன், தங்களது சுயஜாதக அடிப்படையில், பாக்கிய ஸ்தானத்திற்குரிய கிரக அடிப்படையில் தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு, தேனி மாவட்டத்தில் உள்ள குச்சானூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சிக்கோவில் வன்னி மரத்தடி சனீஸ்வரர், கண்டவராயன்பட்டி அருகில் உள்ள நல்லிப்பட்டி ஒற்றைச் சனீஸ்வரர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர்கோவில் போன்ற சிறப்பு தலங்களில் சனி பகவான் வீற்றிருந்து அருள்கொடுக்கிறார். அனைத்து சிவாயலங்களிலும் சனி பகவான் நவக்கிரகத்தில் காட்சி கொடுப்பார். முறையாக அவரை வழிபட்டு வந்தால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல இயலும்.

அரவணைக்கும் கிரகம்

‘ஆயுள்காரகன்’ என்று வர்ணிக்கப்படும் சனிபகவான், உயிரைத் தாக்கும் கிரகம் அல்ல. உயிரைக் காக்கும் கிரகம் என்று அறிந்து கொள்ளுங்கள். நீதியின் சின்னமாக விளங்கும் தராசுச் சின்னம் இடம் பெற்ற துலாம் ராசியில் அவர் உச்சம் பெறுகின்றார். எனவே அவர் ‘நீதிமான்’ என்றும், ’நியாயவான்’ என்றும் போற்றப்படுகின்றார். அவரை நாம் போற்றிக் கொண்டாடினால் அவர் ஆட்டி வைக்கும் கிரகம் அல்ல, அரவணைக்கும் கிரகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நல்லதைச் சொல்வோம்! நல்லதைச் செய்வோம்! நல்லதே நடக்கும்! சுபம்.

Next Story