ஆன்மிகம்

ஆண்டாளுக்கு பிடித்தது.. அனைவருக்கும் பிடிக்கிறது.. + "||" + Favorite for Aandal Everyone likes it

ஆண்டாளுக்கு பிடித்தது.. அனைவருக்கும் பிடிக்கிறது..

ஆண்டாளுக்கு பிடித்தது.. அனைவருக்கும் பிடிக்கிறது..
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வீடுகளில் வைக்கப்படும் பொங்கல் விரைவாக பொங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பு இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பொங்கல் வைக்க கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மண்டைவெல்லம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வெல்லத்தில் சத்துக்கள் நிறைய உள்ளன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, இடையான்குளம், வளையப்பட்டி, கிருஷ்ணன்கோவில், குன்னூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லம் மற்றும் சீனி தயாரிப்பதற்கான கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அங்கு ஆண்டு முழுவதும் வெல்லம் தயாரிக்கும் பணியிலும், கரும்பு வெட்டும் பணி யிலும் எண்ணற்ற தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

6-ம் நூற்றாண்டில் ஆண்டாளுக்கு நைவேத்தியமாக திரட்டிப்பால் படைக்கப்பட்டுள்ளது. அந்த திரட்டிப்பால், இங்குள்ள மண்டைவெல்லத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது. காரணம் இந்த வெல்லம் ஆண்டாளுக்கு பிடித்தமானதாம். காலபோக்கில் திரட்டிப்பால், பால்கோவாவாக மாற்றம் செய்யப்பட்டது. எனவே 6-ம் நூற்றாண்டிலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் வெல்லம் சிறப்பு பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

கேரள மாநிலத்தில் உள்ளவர்கள் பல்வேறு விதமான இனிப்பு பதார்த்தங்கள் செய்ய இந்த வெல்லத்தை விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த வெல்லம் பார்ப்பதற்கு திருப்பதி லட்டு போல இருக்கும்.

அதன் சிறப்புகள் குறித்து வெல்லம் தயாரிப்பவர்கள் கூறியதாவது:

‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க் கும் மேற்பட்ட கிராமங்களில் வெல்லம் தயாரிப்பதற்காக கரும்பினை சாகுபடி செய்துள்ளனர். இங்கு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லம் தயார் செய்யப்படுகிறது. அதேபோல சீனி தயாரிப்பதற்காகவும் இங்குள்ள கரும்பினை வெட்டி மற்ற பகுதி களுக்கு அனுப்புகின்றனர். வெல்லம் தயாரிப்பின் மூலம் எண்ணற்ற பேர் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

ஆண்டு முழுவதும் இங்கு வெல்லம் தயாரிக்கப்படுகிறது. மற்ற மாதங்களை காட்டிலும் மார்கழி, தை மாதங்களில் அதிகமாக தயாரிப்போம். வழக்கமாக தினமும் குறைந்தது 8 குவிண்டால் தயாரித்தால் பொங்கல் சமயத்தில் 10 குவிண்டால் வரை தயார் செய்வோம். இங்கு தயாரிக்கப்படும் வெல்லத்தில் கலப்படம் எதுவும் இல்லாமல் சுத்தமாக இருப்பதால் அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். காற்று புகாத வண்ணம் பாதுகாத்தால் 1 வருடத்திற்கு கெட்டுப்போகாது.

இங்குள்ள வெல்லம் இனிப்பு சுவை மிக்கது. மற்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் வெல்லம் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் இங்குள்ள வெல்லம் கருப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் நன்றாக இருக்கிறது.

கடந்த பொங்கலில் குவிண்டால் ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை விலை போனது. தற்போது குவிண்டால் ரூ.4,000 முதல் ரூ.4,200 வரை தான் விலை போகிறது’’ என்கிறார்கள்.