ஆன்மிகம்

வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன் + "||" + Thinking of success Arrogant Arjunan

வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன்

வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன்
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடைபெற்ற குருசேத்திரப் போர் முடிந்து விட்டது.
துரியோதனன் கொல்லப்பட்டுவிட்டான். அர்ச்சுனன், தேரில் இருந்தபடியே ஒருமுறை சுற்றிப்பார்த்தான். போர்க்களம் முழுவதும் பிணக்குவியல்களே காணப்பட்டன. அவனுக்குள் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்ட பெருமிதம் புகுந்துகொண்டது. ‘என்னை விட சிறப்பான வீரன் எவன் இருக்கிறான்?’ என்பது போல் கர்வமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டான்.

அப்போது அவனது பெருமிதக் கனவைக் கலைப்பது போல, கிருஷ்ணரின் குரல் இடைபுகுந்தது. தேரில் அமர்ந்து குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றியிருந்த கிருஷ்ணர், “அர்ச்சுனா.. போர் முடிந்துவிட்டது. இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். விரைவாக தேரை விட்டு இறங்கு” என்றார்.

‘எத்தனை பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். அதை எண்ணி பெருமைப்படக்கூட முடியவில்லையே.. அதற்குள் கிருஷ்ணன் கடுமையான குரலால் நம்மை வாட்டுகிறானே’ என்று நினைத்த அர்ச்சுனன், ஒரு கேள்வியை கிருஷ்ணர் முன்பாக வைத்தான்.

“கிருஷ்ணா.. என்னுடைய இந்த வெற்றிக்கு நீ என் பக்கம் நின்றதற்கு மகிழ்ச்சி. ஒரு வெற்றியாளரை, அவனது தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கிவிட வேண்டும் என்ற சம்பிரதாயத்தை நீ மறந்து விட்டாயா?. அப்படிச் செய்வது எனக்கு பெருமையாக இருக்குமல்லவா?” என்றான்.

ஆனால் அர்ச்சுனன் சொன்னது எதையும் காதில் வாங்காதது போல இருந்த கிருஷ்ணர், “இன்னும் இறங்கவில்லையா? ம்.. சீக்கிரம் தேரை விட்டு இறங்கு” என்றார், கண்டிப்புடன்.

மிகுந்த வருத்தத்தோடு, தேரை விட்டு தானே இறங்கினான் அர்ச்சுனன். உடனே, “தேரின் பக்கத்தில் நிற்காதே.. சற்று தள்ளி போய் நில்” என்று உத்தரவிட்டார், கிருஷ்ணர். அந்த அதட்டல் தொனியை, அர்ச்சுனனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சற்று முன்பாக, வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சியில் கூத்தாடிய மனம், வாடி வதங்கிப் போய்விட்டது. ஒன்றும் புரியாதவனாக, வாடிய முகத்தோடு சற்று தொலைவில் போய் நின்றான்.

அவன் முகத்தைக் கண்டு சற்றே புன்னகைத்த கிருஷ்ணர், இப்போது தேரில் இருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ச்சுனனை இறுகத் தழுவிக் கொண்டார். அடுத்த கணம், அவர்கள் இருந்த தேர் தீப்பற்றி எரிந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனான், அர்ச்சுனன்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கிருஷ்ணரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். சந்தேகக் கேள்விகளோடு விரிந்த அவனது விழிகளைக் கண்டு, அவனுக்கு பதிலளிக்கத் தொடங்கினார், கிருஷ்ணர்.

“அர்ச்சுனா.. போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பலம் வாய்ந்த பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவு நேரம் அதைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனு மனும் புறப்பட்டு விட்டான். எனவேதான் அஸ்திரங்களின் சக்தி வீரியம்பெற்று, தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. ஆனால் நீயோ, ‘எல்லா வெற்றியும் எனக்கே சொந்தமானது’ என்பது போல் பெருமிதத்தில் மிதக்கிறாய். போரில் வெற்றிபெற்ற உனக்கு, அதற்குரிய கவரவத்தைத் தரவில்லை என்று வருத்தப்படு கிறாய். ‘நான்’ என்ற எண்ணத்தால், உனக்குள் ஆணவம் புகுந்துவிட்டது. அது அழிவுக்கான பாதை என்பதை உணர்ந்துகொள்” என்றார், கிருஷ்ணர்.

கிருஷ்ணரும், அர்ச்சுனனும் குருசேத்திரப் போரின் போது, போர்க்களம் முழுவதும் சுற்றிவந்த தேர், இப்போது முழுமையாக எரிந்து சாம்பலாகியிருந்தது. அர்ச்சுனனின் மனதிற்குள் புகுந்திருந்த ஆணவமும்தான்.