ஞானத்தை வழங்கும் செந்நெறியப்பர்


ஞானத்தை வழங்கும் செந்நெறியப்பர்
x
தினத்தந்தி 19 Jan 2021 11:00 PM GMT (Updated: 18 Jan 2021 7:29 PM GMT)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருச்சேறை என்ற ஊர். இங்கு சாரபரமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

 இத்தல மூலவரின் திருநாமம் ‘சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்’ என்பதாகும். அம்பாளிள் திருநாமம், ‘ஞானாம்பிகை, ஞானவல்லி’ என்பதாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படும் இந்தக் கோவில், சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், 158-வது தலமாகும். இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில், இறைவன் மீதும், இறைவி மீதும் சூரியனின் ஒளிக் கதிர்கள் விழுகின்றன.

இத்தல இறைவன், நெறிப்படுத்திய வாழ்க்கையில் ஞானத்தை அருள்பவர். எனவே செந்நெறியப்பர் என்று பெயர் பெற்றார். அவருக்கு துணையாக ஞானத்தை வழங்குவதால், அம்பாள் ‘ஞானாம்பிகை’ என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும், அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னிதியும், ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் உள்ளது. இந்த விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் கூறுவார்கள்.

மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சிவபெருமான், பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும், சிறப்பு மண்டபமும், மகாமண்ட பமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதல் தீர்த்தம் ‘பிந்து சுதா தீர்த்தம்.’ இது கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. இரண்டாவது ‘ஞான தீர்த்தம்.’ இது ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ விளங்குகிறது. இது ஆலய தெப்பக்குளம் ஆகும். கோவில் வெளிப்பிரகாரத்தில் மூலவருக்கு இடது பக்கம் இறைவியின் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயத்தில் மட்டுமே, சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று, மூன்று துர்க்கை அம்மன்கள் அருள்பாலித்து வருகின்றனர். ஆலய உட்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், துர்க்கை, சூரியன், சனி பகவான் ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன.

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை ஆகிய திருவிழாக்கள் இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. இத்தலத்து சாரபரமேஸ்வரரை வணங்கினால் கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும், பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலவிருட்சமான மாவிலங்கை மரத்தில் வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றியும் காணப்படுவது இந்த கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது.

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

வறுமை போக்கும் ஈசன்
கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர், இந்த ஆலயத்தின் சிறப்பாகும். மார்க்கண்டேய முனிவர், தமது ஆத்மார்த்த மூர்த்தியாக உட்பிரகாரத்தில், விநாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் அமைத்து வணங்கி வந்தார். அந்த லிங்கமே ‘கடன் நிவர்த்தீஸ்வரர்’ என்ற பெயரில் விளங்குகிறார். வடமொழியில் ‘ரிணவிமோசன லிங்கேஸ்வரர்’ ஆவார். வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே, ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆவார். இத்தலத்தில் பரிகார தெய்வமாக இவர் இருக்கிறார்.

பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையாக வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

Next Story