சிவனை வழிபடுவோம்! சிறப்பெல்லாம் நாம் பெறுவோம்!


சிவனை வழிபடுவோம்! சிறப்பெல்லாம் நாம் பெறுவோம்!
x
தினத்தந்தி 8 Feb 2021 4:24 PM GMT (Updated: 2021-02-08T21:54:09+05:30)

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிவராத்திரி நாளில் தான்.

திருவண்ணாமலையில் அடிமுடி தேடி அலுத்துத் திரும்பிய பிறகு அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிவராத்திரி நாளில் தான். அப்படிப்பட்ட சிவராத்திரி நாளில் சிவனை மனதில் நினைத்து போற்றி வழிபட்டால் பொன்னான வாழ்வு நமக்குக் கிடைக்கும்.

எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.

‘மகா சிவராத்திரி’ என்பது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும். அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்தபிறகு விடியற்காலையில் நீராடி அதன்பிறகு உணவு உண்பது உத்தமமாகும்.

அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும். சிவாலயத்தில் நாம் சிவராத்திரியன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு கைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் வந்து சேரும்.

சிவராத்திரியன்று முழுநாளும் “சிவாயநம” என சிந்தித்திருந்தால் கவலைகள் பறந்தோடும். கனவுகள் நனவாகும். அபாயம் ஒருநாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மகேசன் அருள்புரியும் இந்த இனிய நாள் இவ்வாண்டு மாசிமாதம் 27-ம் நாள் (11.3.2021) வியாழக்கிழமை அன்று வருகின்றது.

சிவராத்திரியன்று மாலை 6 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்றால் நலமுடன் வாழலாம்.


Next Story