முன்னோர்களின் ஆசியைத் தரும் தை அமாவாசை வழிபாடு


முன்னோர்களின் ஆசியைத் தரும் தை அமாவாசை வழிபாடு
x
தினத்தந்தி 10 Feb 2021 11:30 PM GMT (Updated: 2021-02-10T23:29:56+05:30)

மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்களுக்கு நாம் தர்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்களும் ‘உத்தராயன புண்ணிய காலம்’ எனப்படும். அதே போல், ஆடி முதல் மாா்கழி வரையான 6 மாதங்களும் ‘தட்சணாயன புண்ணிய காலம்’ ஆகும். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், தை மாதத்தில் வரும் அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.

மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்களுக்கு நாம் தர்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு தன் முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அல்லது மாதந்தோறும் அமாவாசைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் போகலாம். அல்லது பலரும் தர்ப்பணம் பற்றி அறியாமல், இதுவரை திதி கொடுக்காமலும் இருந்து வந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அனைவரும், தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது ‘சிரார்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.

தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மராஜா, அனுமதி தருவார். பித்ருக்கள் அனைவரும், அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காக்கும்.

பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால் தான் வனத்தில் இருந்தபோது தன் தந்தைக்கு செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்த பிறகு, ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் செய்தார். அதே போல் தனக்காக உயர் நீத்த கழுகு பறவையான ஜடாயுவுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்து முடித்து, தர்ப்பணம் கொடுத்தார். இப்படி முன்னோர்களுக்காக செய்யும் தர்ப்பணத்தால், நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கி, நன்மைகள் தேடி வரும்.

Next Story