ஆன்மிகம்

இறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் செயல்… + "||" + The curse of the Lord The act of receiving

இறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் செயல்…

இறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் செயல்…
உழைப்பு இல்லாமல் அநியாயமான வழிகளில் வரும் செல்வங்களை இஸ்லாம் வெறுத்து ஒதுக்குகின்றது.
தன் குடும்பங்களுக்காக உழைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரின் மீது கடமையென்றும், அதற்காக உழைத்து வாழ்வதை ஊக்குவிக்கின்றது இஸ்லாம். உழைப்பு இல்லாமல் அநியாயமான வழிகளில் வரும் செல்வங்களை இஸ்லாம் வெறுத்து ஒதுக்குகின்றது.

“மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கிடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (லஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள்” என்று திருக்குர்ஆன் (2:188) எச்சரிக்கை செய்கின்றது.

கையூட்டுப் பெற்று தன் மீதுள்ள பொறுப்புகளைச் செய்வதற்கு இஸ்லாம் வன்மையாகக் கடிந்து கொள்கிறது. லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் இறைவனின் சாபத்தைக் கொண்டு வருமென்று மேற்கோள் காட்டுகிறது இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “லஞ்சம் கொடுப்பவன் மீதும், வாங்குபவன் மீதும் அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டுமாக”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னுமாஜா).

பதவி, பொறுப்புகளை வைத்து பணமாகவோ, பரிசுப்பொருளாகவோ பெற்றாலும் அதுவும் லஞ்சம் என்கிறது இஸ்லாம்.

‘நபி (ஸல்) அவர்கள் ‘அஸ்த்’ என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் ‘இப்னுல் லுத்பிய்யா’ என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸகாத் வசூலித்துக் கொண்டு வந்த போது ‘இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு கிடைக்கிறதா இல்லையா? என்று பார்க்கட்டுமே. என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்களில் யாரேனும் அந்த ‘ஸகாத்’ பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், மாடாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக்கொண்டிருக்கும்’ என்று கூறினார்கள். பிறகு, தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: புகாரி)

நேர்மையான உழைப்பு இல்லையென்றால், இறைவனுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளும் ஏற்கப்படாது என்பதை பல நபிமொழிகள் சுட்டிக் காட்டுகிறன. இறைவனிடம் பிரார்த்தனைகள் அங்கீகாரம் பெறுவதற்கு உடை, உணவு, இருப்பிடம் நேர்மையான முறையில் சம்பாதித்ததிலிருந்து இருப்பதை விரும்புகிறது இஸ்லாம்.

ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)

கொலை, கொள்ளை, திருட்டு, பொய்கள் எப்படி மோசடியோ? அதபோல கடமையை செய்ய லஞ்சம் பெறுவதும் மோசடிதான். ‘மோசடி செய்வதை ஒரு போதும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதற்கான தண்டனைகளை பன்‌மடங்காக நாளை மறுமையில் கொடுப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.

உழைப்பிற்கு ஊதியம் பெற்றும், லஞ்சமாக மற்றொரு ஊதியம் பெறுதல், மற்றவரின் உரிமையைக் கெடுத்தல், மனதைக் கஷ்டப்படுத்தி பணம் சம்பாதித்தல், தகுதி இல்லாதவர் கூட பதவி பெறுதல் போன்ற அனைத்தும் மோசடியாகும். இவைகள் அனைத்திற்கும் முதல் கதவு லஞ்சமாக இருக்கிறது என்பது யதார்த்த உண்மையை உணர்ந்து இஸ்லாம் லஞ்சத்தை வெறுக்கின்றது.