ஆன்மிகம்

வலிமையான குடும்பம், வலுவான சமூகம் + "||" + Strong family, strong community

வலிமையான குடும்பம், வலுவான சமூகம்

வலிமையான குடும்பம், வலுவான சமூகம்
குடும்பம் எனும் செங்கற்கள் மூலமாகவே சமூகம் எனும் கட்டிடம் கட்டப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரமாகவும் குடும்பமே அமைகிறது. குடும்ப அமைப்பு வலிமையாக அமையும்போது சமூக அமைப்பும் வலிமையாக அமையும்.
குடும்ப அமைப்பு வலுவிழக்கும்போது சமூக அமைப்பும் வலுவிழந்துவிடும். ஆகவேதான் குடும்ப அமைப்புக்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.இஸ்லாமிய வாழ்வின் அடித்தளமே குடும்பம்தான். குடும்பத் தலைவனும் தலைவியும் மார்க்கம் காட்டும் பாதையில் நடக்கும்போது அது இஸ்லாம் விரும்பும் லட்சியக் குடும்பமாக அமையும். சிறந்த குடும்பங்கள் உருவாகாத நிலையில் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியாது.

இலக்கை நோக்கிய குடும்பம்
இறைவன் உருவாக்கிய குடும்பம் எனும் அமைப்பு அவனது வழிகாட்டலுக்கும் திருப்திக்கும் ஏற்றவாறு இவ்வுலகில் செயல்பட வேண்டும் என்று அவன் விரும்புகிறான்.மக்காவில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக வாழ்ந்துகொண்டிருந்த இறைநம்பிக்கையாளர்களின் ஆன்மிக வாழ்வு எவ்வாறு அமைந்து இருந்தது என்பதை திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் பிரதிபலிக்கிறது:

“மேலும், அவர்கள் இறைஞ்சிய வண்ணம் இருப்பார்கள். எங்கள் இறைவனே! எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக”. (திருக்குர்ஆன் 25:74)

அன்றைய மக்கத்து முஸ்லிம்களின் லட்சியம் நீண்டதாகவும், விசாலமானதாகவும் இருந்துள்ளது. தமது வாழ்நாளில் குடும்பத்தினர் மூலம் அடையும் கண்குளிர்ச்சியில் மட்டும் அவர்கள் திருப்தி அடையவில்லை. மாறாக தங்களது மறைவுக்குப் பிறகு வரவிருக்கும் முஸ்லிம் சந்ததிகளுக்குப் பொறுப்பேற்கும் தலைமைத்துவத்தையும் கேட்கிறார்கள்.

நபிமார்கள் தங்களது குடும்ப விஷயத்தில் எவ்வளவு தூரம் கவனம் செலுத்தியிருந்தனர் என்பதை ஆரம்ப கால அத்தியாயங்களில் அல்லாஹ் விவரிக்கின்றான்:

“இப்ராஹீம் (அலை) அவர்கள், என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக!” (திருக்குர்ஆன் 14:40) என்று பிராத்தனை செய்பவராக இப்ராஹீம் (அலை) அவர்கள் இருந்துள்ளார்.

அவரது புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் குறித்து குறிப்பிடும்போது, “மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்” (19:55) என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

அதே பரம்பரையில் வந்த நமது நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் விடுக்கும் வேண்டுகோளைப் பாருங்கள்: “மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக!”. (திருக்குர்ஆன் 20:132)

பெண்களை விட்டுவிட்டு ஆண்களைத் தீண்டும் ஒழுக்கச் சீர்கேட்டில் வீழ்ந்திருந்த ஒரு சமூகத்திற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டவர் லூத் (அலை) அவர்கள். இரண்டு பெண் பிள்ளைகள் அவருக்கு. அல்லாஹ்விடம் அவர் தொடர்ந்து இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றார்: “என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!” (திருக்குர்ஆன் 26:169)

தமது குடும்பத்தினரை அந்த கேடுகெட்ட இழி செயலில் இருந்து காப்பாறுமாறு அல்லாஹ்விடம் அவர் பிரார்த்தனை புரிகின்றார் எனில் தமது குடும்பம் குறித்து அவர் எந்த அளவு கவலை கொண்டிருக்க வேண்டும் என்பது புரிகிறது.

இஸ்லாத்தின் எழுச்சிக்காக உழைக்கும் குடும்பம்
மூஸா (அலை) அவர்களுக்கு தூதுத்துவம் வழங்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர் விடுத்த முதல் வேண்டுகோள் என்ன தெரியுமா? அதனை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக; அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக! மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக!” (20:29-32) மூஸா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவரைப் பாதுகாப்பதற்கும், தயார்படுத்துவதற்கும் அவரது தாயாரும் சகோதரியும் அளித்த பங்களிப்புகள் குறித்து திருக்குர்ஆனின் 28 வது அத்தியாயம் (வசனங்கள் 10-13) விரிவாக விளக்குகிறது.

ஆனால் இன்றைய குடும்பங்களில் உள்ள கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவருமே மேற்குலகின் சிந்தனைத் தாக்கத்தால் பதிக்கப்படுகின்றனர். சர்வசாதாரணமாக மண விலக்கு, மாற்று மதத்தவர்களைத் திருமணம் செய்தல், பெற்றோர் பிள்ளை உறவில் விரிசல், ரத்த உறவுகள் பேணப்படாமை, உலக லாபங்களை மட்டுமே இலக்காகக் கொண்ட துணைகளைத் தெரிவு செய்தல், பிள்ளை வளர்ப்பில் கோளாறு முதலான பல அம்சங்கள் இன்றைய குடும்ப வாழ்வை சிதைத்து வருகின்றன. இப்பிரச்சினைகளை மிகச்சரியாக இனம்கண்டு அவற்றுக்கான தீர்வுகள் குறித்து, சமூகத் தலைமைகள் சிந்திப்பது காலத்தின் கட்டாயமும் மார்க்கத்தின் கடமையும் ஆகும்.

வலிமையான குடும்பத்தின் லட்சியம்
பிள்ளைகளுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது குடும்பத்தின் மற்றுமொரு முக்கிய நோக்கமாக உள்ளது. பிள்ளைகள், அல்லாஹ் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் அமானிதம். அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கொடுப்பது நமது தலையாய கடமை. இல்லையேல் இவ்வுலகிலும் மறுமையிலும் பெரும் நஷ்டம் ஏற்படும். அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 66:6)

பிள்ளைகளிடம் ஏழு வயதில் தொழச் சொல்லுமாறு ஏன் இஸ்லாம் வலியுறுத்துகிறது? ஏனெனில் அந்த பருவத்தில் இருந்தே அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்பதால்.