ஆன்மிகம்

`மன்னா'வை விட சிறந்த உணவு எது? + "||" + Who is better food than manna?

`மன்னா'வை விட சிறந்த உணவு எது?

`மன்னா'வை விட சிறந்த உணவு எது?
இயேசு பல ஊர்களை சுற்றி வந்து பல புதுமைகளை செய்து கொண்டிருந்தார். பல நூறு மக்களுக்கு அற்புதம் செய்து உணவளித்தார். அவர் செய்த சில அற்புதங்களைக் கண்டு மக்கள் அவரை, ஓர் உணவுத் தொழிற்சாலையாகக் கருதிக்கொண்டார்கள். அவரிடம் திரும்பத் திரும்ப அதையே எதிர்பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ் நிலையில் இயேசுவின் பதில் அவர்களைத் தெளிவடையச் செய்தது.
யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 6-ல் 30 முதல் 35 இறைவசனங்களை வாசித்துப் பாருங்கள். இயேசு, கொல்லப் படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மக்களில் சிலர் அவரிடம் வந்து, “ஐயா நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் அருள் அடையாளம் காட்டுகிறீர். எகிப்திலிருந்து மீட்டுவரப்பட்ட எங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் தங்கியிருந்தபோது ‘மன்னா’ என்ற உணவை உண்டார்களே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளப்பட்டது’ என மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவை அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார். உடனே அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று 
கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இருக்காது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இருக்காது” என்றார்.இயேசுவை அன்றாடம் அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு அவர் வழியே உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் தண்ணீருக்குக் கூட வழியில்லாத பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ‘மன்னா’என்னும் உணவைப் பெற்றுக் கொடுத்தார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ‘தோரா’ என்னும் திருச்சட்டத்தை வழங்கினார்.

இதைத் தங்கள் ஆன்மிக வரலாற்றின் மூலம் அறிந்து வாழ்ந்த மக்கள், இயேசுவும் அதே உணவைப் பெற்றுத்தருவார் என நினைக்கிறார்கள். இயேசுவால் செய்ய முடியாத அதிசய செயல் ஏதாவது உண்டா எனத் தங்களின் எதிர்பார்ப்புக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அதிசயமான விதத்தில் ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய நிகழ்வும் அவர்கள் இப்படி எதிர்பார்க்கக் காரணமாக அமைகிறது. ஆனால், இயேசு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை அவர்களுக்கு வழங்குகிறார். அது மன்னாவைப் போல் சில காலம் மட்டுமே தரப்பட்ட உணவு அல்ல. என்றும் ஜீவித்திருக்கும் உயிருள்ள உணவு. பாடுகள் வழியாக இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும்.

முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு இறை நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே அர்ப்பணித்ததால் நமக்கு உணவாக மாறினார். இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்.

இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும். இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடக்கும் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு. நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே தன் மகனின் வழியாக நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் ஏற்பாடு.

தொடர்புடைய செய்திகள்

1. இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.