காளமேகப்புலவர் பாடிய முருகன் பாட்டு


காளமேகப்புலவர் பாடிய முருகன் பாட்டு
x
தினத்தந்தி 16 Feb 2021 1:37 PM GMT (Updated: 2021-02-16T19:07:05+05:30)

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவராக, காளமேகப் புலவர் கருதப்படுகிறார். இவர் பிறந்தது வைணவ மதம் என்றாலும், பருவ வயதில், திருவானைக்கா திருத் தலத்தில் இருந்த ஒரு பெண்ணின் மீது கொண்ட ஈர்ப்பால் சைவ மதத்தைத் தழுவினார்.

அதன்பிறகு சைவ சமயத்தின் மீது பல பாடல் களைப் பாடியுள்ளார். சமயம் சார்ந்த பல நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் சிலேடைப் பாடல்களும், நகைச்சுவை பாடல்களும் பாடுவதில் வல்லவர். 

இவரை ‘ஆசுகவி’ என்றும் அழைப்பார்கள். ‘ஆசுகவி’ என்பதற்கு, ‘கொடுத்த ஓரிரு வார்த்தையைக் கொண்டு மறுநொடியே கவி இயற்றும் திறன் படைத்தவர்’ என்று பொருள். அப்படிப்பட்ட காளமேகப் புலவரை ஒருவர் சந்தித்தார். அவர் காளமேகப்புலவரிடம் கொஞ்சம் விதண்டாவாதம் செய்வதற்காகவே வந்திருந்தார். காளமேகப் புலவரைப் பார்த்து, “ஐயா.. நீங்கள் பெரிய புலவர் என்று பலரும் பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா?” என்றார்.

“நான் ஓரளவு கவி இயற்றுவதைக் கொண்டு சிலர் அப்படி உங்களிடம் சொல்லியிருக்கலாம்.. இருந்தாலும் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்” என்றார், காளமேகப் புலவர்.உடனே அந்த நபர், “நீங்கள் பெரிய புலமை பெற்றவர் என்றால், முருகப்பெருமானைப் புகழ்ந்து உங்களால் பாட முடியுமா?” என்றார். காளமேகப் புலவரோ, “முருகனின் அருளால் அது என்னால் முடியும். வேல் என்ற வார்த்தையைக் கொண்டு பாடவா? அல்லது மயில் என்ற வார்த்தையை வைத்துப் பாடவா?” என்று கேட்டார். அதற்கு அந்த நபர், “வேலிலும் தொடங்க வேண்டாம்.. மயிலைக் கொண்டும் தொடங்க 
வேண்டாம். ‘செருப்பு’ என்ற வார்த்தையில் தொடங்கி, ‘விளக்கமாறு’ என்ற வார்த்தையில் முடியுங்கள் பார்ப்போம்” என்றார்.

‘காலில் அணிவது செருப்பு, வீட்டை சுத்தமாக்க பயன்படுவது விளக்கமாறு, இந்த இரண்டையும் வைத்து எப்படிப் பாடுவது?’ என்று காளமேகப் புலவர் தவித்துப் போவார் என, அந்த நபர் நினைத்தார். ஆனால் நடந்தது வேறாக இருந்தது.

‘செருப்புக்கு வீரர்களை

சென்றுழக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனை

புல்ல- மருப்புக்கு

தண்தேன் பொழிந்த

திரு தாமரைமேல் வீற்றிருக்கும்

வண்டே விளக்குமாறே’

என்று அந்த நபர் கொடுத்த வார்த்தைகளை வைத்தே, தன்னுடைய பாடலை பாடி முடித்தார், காளமேகப் புலவர்.

‘செரு’ என்றால் ‘போர்க்களம்’ என்று அர்த்தம். செருப்புக்கு என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும். அப்படி ‘போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறு உன்னைக் கேட்கிறேன்’ என்ற பொருளில் பாடி முடித்தார். ‘விளக்குமாறு’ என்பதற்கு ‘விளக்கம் சொல்லுமாறு’ என்றும் பொருள் கொள்ளலாம்.

காளமேகப்புலவர் பாடிய பாடலையும், அதற்கான அர்த்தத்தையும் அறிந்து நெகிழ்ந்து போனார், அந்த நபர்.

Next Story