புனிதம் மிக்க சபரிமலையின் 18 படிகள்


புனிதம் மிக்க சபரிமலையின் 18 படிகள்
x
தினத்தந்தி 16 Feb 2021 1:51 PM GMT (Updated: 2021-02-16T19:21:32+05:30)

சபரிமலை என்றாலே நம் நினைவுக்கு வருவது அங்கு அற்புதமாக வீற்றிருக்கும் ஐயப்பன் தான். இவரைக் காணச் செல்பவர்களில், மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் மட்டுமே, புனிதம்மிக்க 18 படிகளின் வழியாக நடந்து சென்று ஐயப்பனை தரிசிக்க முடியும்.

மாலை அணிந்து விரதம் இருக்காதவர்கள், வேறு பாதையில் விடப்படுவார்கள். சுவாமி ஐயப்பனின் கோவிலில் உள்ள இந்த 18 படிகளும் மிகப்பெரிய தத்துவத்தை சுமந்து நிற்பதாக நம்பப்படுகிறது. இந்த பதினெட்டு படிகளும், ஐயப்பனின் 18 படைக் கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வில், வாள், வேல், கதை, அங்குசம், பரசு, பிந்திபாவம், பரிசை, குந்தம், ஈட்டி, கை வாள், முன்தடி, கடுத்தி வை, பாசம், சக்கரம், ஹலம், மழு, முஸலம் ஆகியவையே அந்த 18 கருவிகள் ஆகும்.

மேலும் இந்த 18 படிகளையும், ஐந்து இந்திரியங்கள், ஐம் புலன்கள், ஐந்து கோசங்கள், மூன்று குணங்கள் என்று பிரித்திருக்கிறார்கள். கண், காது, மூக்கு, நாக்கு, கை-கால்கள் ஆகியவை ‘பஞ்சேந்திரியம்’ எனப்படுகிறது. பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல் ஆகிய ஐந்தும் ‘ஐம் புலன்கள்’ என்றும், அன்னமய கோசம், ஆனந்தமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், ஞானமய கோசம் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச கோசங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகியவை மூன்று குணங்களாகும். இந்த பதினெட்டையும் பயன்படுத்தியோ, 
அல்லது வெற்றிகொண்டோ வாழ்வதற்கு, ஐயப்பனின் 18 படிகளையும் ஏறி அவனை வழிபட வேண்டும்.

இது தவிர 18 படிகளையும், மெய், வாய், கண், காது, மூக்கு, சினம், காமம், பொய், களவு, சூது, சுயநலம், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர, ஸத்ய, தாமஸ, ராஜஸ ஆகிய 18 குணங்களோடும் ஒப்பிடுகிறார்கள். இவற்றையெல்லாம் கடந்தால்தான் நாம் இறைவனை தரிசிக்க முடியும். அதோடு சபரிமலை ஐயப்பன் கோவிலைச் சுற்றியுள்ள, 18 மலை தெய்வங்களைக் குறிப்பதுதான் பதினெட்டு படிகள் என்றும் கூறுகிறார்கள். அந்த பதினெட்டு தெய்வங்களையும் இங்கே பார்க்கலாம்.

ஒன்றாம் திருப்படி : சூரியன்

இரண்டாம் திருப்படி : சிவன்

மூன்றாம் திருப்படி : சந்திரன்

நான்காம் திருப்படி : பராசக்தி

ஐந்தாம் திருப்படி : அங்காரகன்

ஆறாம் திருப்படி : முருகன்

ஏழாம் திருப்படி : புதன்

எட்டாம் திருப்படி : விஷ்ணு

ஒன்பதாம் திருப்படி : வியாழன் என்னும் குரு

பத்தாம் திருப்படி : பிரம்மா

பதினொராம் திருப்படி : சுக்ரன்

பனிரெண்டாம் திருப்படி : லட்சுமி

பதிமூன்றாம் திருப்படி : சனி

பதிநான்காம் திருப்படி : எமதர்மராஜன்

பதினைந்தாம் திருப்படி : ராகு

பதினாறாம் திருப்படி : சரஸ்வதி

பதினேழாம் திருப்படி : கேது

பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்

இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பது, ஒற்றை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டைப் படையில் தெய்வக் குடும்பங்களும் வாசம் செய்கின்றனர். இதனால்தான், சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள் முறையாக செய்யப்பட்டு வருகின்றன.

Next Story