இடையூறுகளை நீக்கி அருளும் வடுகநாதர்


இடையூறுகளை நீக்கி அருளும் வடுகநாதர்
x
தினத்தந்தி 17 Feb 2021 11:03 AM GMT (Updated: 2021-02-17T16:33:40+05:30)

கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் இடையில் இருக்கிறது குண்டடம் என்ற ஊர். இங்கு வடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமான மூர்த்தமாக, பைரவர் விளங்குகிறார். ஈசனை வழிபடுபவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்து காப்பவர் இவரே. இவரை வணங்குபவர்களுக்கு எம பயம் இல்லை. சிவாலயங்கள் அனைத்திலும் இவர் வீற்றிருப்பார். நாயை வாகனமாகக் கொண்டவர். வேதங்களே, நாய் வடிவில் இவரது வாகனமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் குண்டடம் பகுதியில் அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்திருந்தன. எனவே இதற்கு ‘இந்து வனம்’ என்று பெயர். இந்த இடத்தில் விடங்கி முனிவர் என்பவர், ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நினைத்து தவம் இருந்து வந்தார். இந்த நிலையில் அந்த வனத்தில் இருந்த சீசகன் என்ற அரக்கன், விடங்கி முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்து வந்தான். அவரையும் கொல்லத் துணிந்தான். இதனால் பதறிப் போன முனிவர், காசி விசுவநாதரையும், விசாலாட்சி அம்மனையும் நினைத்து வேண்டினார்.

தன்னுடைய பக்தனுக்கு ஏதாவது இடையூறு என்றால், ஈசன் விட்டு விடுவாரா என்ன.. முனிவரின் வேண்டுதலுக்கு மதிப்பு கொடுத்து, தன்னுடைய வடிவங்களில் ஒருவரான வடுக பைரவரை அனுப்பி வைத்தார். காசியில் இருந்து குண்டடம் வந்த வடுக பைரவர், அரக்கனை கொன்று தன்னுடைய கடமையை செய்து முடித்தார். இதையடுத்து விடங்கி முனிவர் மீண்டும் தன்னுடைய தவத்தைத் தொடங்கினார். அவருக்கு வேறு எந்த அரக்கர்களாலும் இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காக, பைரவர் அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்பினார். இதற்காக அங்கிருந்த ஒரு இலந்தை மரத்தடியில் குடியமர்ந்தார்.

விடங்கி முனிவர் தன்னுடைய தவம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொர்க்கம் செல்ல முன்வந்தார். அதற்கு முன்னதாக, பைரவர் குடிகொண்டிருந்த இலந்தை மரத்தைச் சுற்றி சிறிய கோவில் ஒன்றை எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால், இத்தல இறைவன் ‘விடங்கீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு ‘கொங்கு வடுகநாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஆரம்ப காலத்தில் இந்தக் கோவில் எட்டு பிரகாரங்கள், எட்டுத் தெப்பக்குளங்கள் என்று மிகப் பிரமாண்டமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயம் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கோவிலின் எதிரே திருக்குளம் உள்ளது. நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் தென்படுகின்றன.

ராஜகோபுரத்தை தரிசித்து ஆலயத்திற்குள் நுழைந்தால், பிரகாரத்தில் சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜப் பெருமாள், சனீஸ்வரர், நவக்கிரகங்களை தரிசிக்கலாம். கோவிலுக்கு என்று நந்தவனமும் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக இடது பக்கம் நோக்கிய நிலையில் இருக்கிறது. தனிச் சன்னிதிகளில் விசாலட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் வீற்றிருக்கிறார்கள். அடுத்ததாக காலபைரவரின் வடிவமான வடுகநாதரின் சன்னிதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக செய்யப் படுகின்றன. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 66 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லடத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் குண்டடம் அமைந்துள்ளது. பல்லடத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Next Story