சப்த கயிலாய தலங்கள் - தாமரைப்பாக்கம்


சப்த கயிலாய தலங்கள் - தாமரைப்பாக்கம்
x
தினத்தந்தி 3 March 2021 10:30 PM GMT (Updated: 3 March 2021 11:35 AM GMT)

10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.

நார்த்தாம்பூண்டி

திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் நார்த்தாம்பூண்டி உள்ளது. தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்தான். இங்கு கயலாசநாதர் திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானை நினைத்து தொடர்ச்சியாக 12 ஆண்டுகள், கிருத்திகை விரதம் இருந்தாராம் நாரத முனிவர். அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இதனால் இந்த திருத்தலம் ‘நார்த்தாம்பூண்டி’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோவிலாக இந்த கயிலாசநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் பல்லவர்கள், வல்லாள மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர பேசரரசு, சம்புவராயர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பதைக் காணலாம்.

Next Story