ஆன்மிகம்

சப்த கயிலாய தலங்கள் + "||" + Saptha Kailaya Sites

சப்த கயிலாய தலங்கள்

சப்த கயிலாய தலங்கள்
அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன்.
சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.

காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்த அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

மண்டகொளத்தூர்

சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.