ஆன்மிகம்

கனவுகளை நனவாக்கும் கந்தன் வழிபாடு + "||" + Making dreams come true Kandan worship

கனவுகளை நனவாக்கும் கந்தன் வழிபாடு

கனவுகளை நனவாக்கும் கந்தன் வழிபாடு
மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும், அதில் பிறப்பவர்கள் முதல் இடத்தைப் பெற்றவர்களாக விளங்குவர். காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெல்லாம் கொண்டாடும் உத்திரப் பெருவிழா நடைபெறும் மாதமாக இந்த மாதம் விளங்குகின்றது.
ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட்சியம்மன் சொக்கநாதரை மணந்து கொண்டதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் உயிர்ப்பித்துத் தந்ததும் இந்த நாளில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள் ‘பங்குனி உத்திரத்திருநாள்’ ஆகும். அந்த இனிய நாள், பங்குனி மாதம் 15-ந் தேதி (28-3-2021) ஞாயிற்றுக்கிழமை வருகின்றது.

திருமணம் முடிய வேண்டுபவா் களும், பிரிந்த தம்பதியர் இணையவும், பிரச்சினைகளுக்கு மத்தியில் உழலும் குடும்பத்தில் அமைதி கிடைக்கவும், வழிகாட்டும் நாள்தான் உத்திரத் திருநாள். அன்றைய தினம் முருகப்பெருமானை சிந்தனையில் நிறுத்தி வழிபட்டால் வந்த துயரங்கள் விலகியோடும்.

ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது ‘செவ்வாய் தோஷம்’ என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் ஆணாக இருந்தால் பெண் கிடைப்பது அரிது. பெண்ணாக இருந்தால் மாப்பிள்ளை கிடைப்பது அரிது. செவ்வாய்க்குரிய தலங்களைத் தேர்ந்தெடுத்துச் சென்று வழிபட்டு வருவதோடு, சுய ஜாதகத்தில் பாதசார அடிப்படையில் தெய் வழிபாடுகளை மேற்கொண்டு, முருகப்பெருமானையும் செவ்வாய்க்கிழமை தோறும் முறையாக வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும்.

செவ்வாயின் ஆதிக்கத்தில் சிக்கி திருமணத் தடைகளைச் சந்தித்தவர்கள், உத்திர நாளில் விரதமிருந்து உலகை மயிலேறிச் சுற்றி வந்த முருகப்பெருமானை வழிபட்டால் உன்னத வாழ்க்கை அமையும். எனவே வரம் தரும் நாள் மட்டுமல்ல, வரன் தரும் விழா என்று கூட பங்குனி உத்திரத் திருவிழாவைக் கருதலாம். அன்று வழிபடுவதன் மூலம் வரனும் கிடைக்கும், வரமும் கிடைக்கும்.

செவ்வாய் தோஷத்தைக் கூட சந்தோஷமாக மாற்றுகிற ஆற்றல், பங்குனி உத்திரத்திற்கு உண்டு. வாழ்க்கை வளமாக எதையேனும் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை சிவன் மீது வைத்து மாசி மாதம் சிவராத்திரி கொண்டாடுகின்றோம். தந்தை மீது மாசி மாதத்தில் நாம் வைத்த நம்பிக்கையை தனயன் மீது பங்குனி மாதத்தில் நாம் வைக்க வேண்டும்.

இல்லத்து பூஜையறையில் வள்ளி-தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்துவகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் செய்து கவச பாராயணங்களை படிப்பது நல்லது. குத்து விளக்கின் கீழே இடும் கோலம் பின்னல் கோலமாக இல்லாமல், நடுவீட்டுக் கோலம் என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்கள் இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான், ‘புள்ளி’ எனப்படும் வாரிசு பெருகும் என்பார்கள்.

உத்திரத் திருநாளைக் கொண்டாடினால் உன்னத வாழ்வமையும். பூஜையறையில் வள்ளி-தெய்வானை உடனிருக்கும் முருகப்பெருமானின் படத்தை வைத்து பஞ்சமுக விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த பாலகனுக்கு, பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்சாத வாழ்வை நமக்களிப்பான். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் நமது கண்ணீரைத் துடைக்க முன்வருவான்.

பார் புகழும் பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களுக்கு அருகில் தண்ணீர் பந்தல் வைத்து பக்தர் களுக்கெல்லாம் மோர், தண்ணீர், பானகம் என்று கொடுத்தால் எண்ணிய பலன் நமக்குக் கிடைக்கும்.