ஆன்மிகம்

நான்கு கால பூஜை + "||" + Four term puja

நான்கு கால பூஜை

நான்கு கால பூஜை
சிவராத்திரி அன்று, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம நேரத்திலும், சிவபெருமானை முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். 4 கால வேளைகளையும், அவற்றில் செய்ய வேண்டிய வழிபாடுகளையும் பற்றி பார்ப்போம்.
முதல் ஜாமம் (மாலை 6 முதல் இரவு 9 மணி வரை):-

இந்த கால வேளையில் ஈசனுக்கு, பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யம் என்பது, பசும் பால், பசு நெய், பசுவின் சிறுநீர், பசு சாணம், பசு தயிர் ஆகியவை கலந்து செய்யப்படும் ஒருவித மருந்துப் பொருளாகும். அதோடு அகில் குழம்பும், வில்வமும் அணிவிக்க வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை படைக்க வேண்டும். இந்த வேளையில் 4 வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமம் (இரவு 9 மணி முதல் 12 மணி வரை):- 

இந்த கால வேளையில், பஞ்சாமிர்தம் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், தயிர், சர்க்கரை, பால், நெய் ஆகிய ஐந்தும் சேர்ந்ததுதான் ‘பஞ்சாமிர்தம்.’ பெரும்பாலானவர்கள் தயிருக்கு பதிலாக வாழைப்பழத்தையே தற்போது சேர்த்து பஞ்சாமிர்தத்தை செய்கிறார்கள். மேலும் இந்த பூஜை நேரத்தில் இறைவனுக்கு சந்தனமும், தாமரைப்பூவும் அணிவிக்க வேண்டும். அதோடு பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படும் துளசி இலையைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சனை செய்வார்கள். நைவேத்தியமாக பாயசம் செய்து படைக்கலாம். வேதங்களில் 2-வதாக உள்ள யஜூர் வேதத்தை பாராயணம் செய்யலாம்.

மூன்றாம் ஜாமம் (நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை):- 

இந்த கால வேளையில், தேன் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியது. இந்த அபிஷேகத்தை செய்வதன் மூலமோ, கோவிலுக்குச் சென்று பார்ப்பதன் மூலமோ தேன் போன்ற இனிப்பான வாழ்க்கையை இறைவன் நமக்குத் தந்தருள்வான். மேலும் அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லைப் பூ ஆகியவற்றை இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். மூன்று இலைகள் கொண்ட, வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக எள் சாதத்தை படைக்கலாம். இந்த ஜாம வேளையில், மூன்றாவது வேதமாக கருதப்படும் சாம வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

நான்காம் ஜாமம் (அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை):- 

இந்த கால வேளையில், கரும்புச் சாறு கொண்டு, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது சிறப்பான பலனைத் தரும். இத்துடன் அரைத்த குங்குமப் பூவுடன், நந்தியாவட்டை மலர் அணிவிக்க வேண்டும். மேலும் நீலோத்பவ மலர் கொண்டு இறைவனை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக சுத்தமான அன்னத்தை ஈசனுக்கு படைக்கலாம். இந்த நான்காம் ஜாமத்தில், வேதத்தில் கடைசி வேதமாக தொகுக்கப்பட்ட அதர்வண வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.