சாத்தானின் சோதனையும், தவக்கால சிந்தனையும்..


சாத்தானின் சோதனையும், தவக்கால சிந்தனையும்..
x
தினத்தந்தி 10 March 2021 11:00 AM GMT (Updated: 10 March 2021 11:00 AM GMT)

இயேசுவுக்குச் சாத்தான் வைத்த சோதனைகளில் இருந்தும், சோதனைக்காரனாகிய அவனுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத் தருணமாக தவக் காலம் இருக்கிறது.

இயேசு தனது ஆன்மிக வாழ்வைத் தொடங்கும்முன் அவரது 30-வது வயதில் யோர்தான் நதியில் யோவானிடம் ஞானஸ்தானம் பெறுகிறார். அதன் பின்னர் கடவுளுடைய சக்தி அவரை யூதேயா பாலைவனத்துக்கு வழிநடத்திச் செல்கிறது. பாலைநிலத்தில் இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் அலைந்து திரிகிறார். அந்த 40 நாட்களும் அவர் எதுவும் சாப்பிடவில்லை. 40-ம் நாள் முடிவில் பசி அவரை வாட்டியெடுத்தது. 40 நாட்கள் தவத்தின் இறுதிக் கட்டத்திலாவது அவரைத் தோல்வி அடையச் செய்வதற்காக சோதனைக்காரனாகிய சாத்தான் அங்கே வருகிறான். அப்போது இயேசுவிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். அதற்கு இயேசு, உணவால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனிதன் உயிர் வாழ்வான் என எழுதப்பட்டிருக்கிறதே என்று பதில் கூறினார்.

சாத்தான் அடுத்து பரிசுத்த நகரத்துக்கு இயேசுவைக் கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்கவைத்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னான். அதற்கு இயேசு, “உன் கடவுளாகிய தந்தையைச் சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே” என்று பதில் கூறினார்.

இறைமகன் குறித்து தீர்க்கதரிசனங்களால் நிறைந்திருந்த வேத வார்த்தைகளை வைத்து இயேசுவை மயக்க நினைத்த சாத்தான் இயேசுவின் பதிலால் வெட்கிப்போனான்.

சாத்தானின் புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு இயேசு மயங்கவில்லை; சாகசம் செய்து பார்ப்பவர் களைப் பிரமிக்க வைக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அப்படிச் செய்து கடவுளாகிய தன் தந்தையைச் சோதிப்பது தவறு என்று வேதவசனங் களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால், சாத்தான் அவரை விடுவதாக இல்லை. மிக மிக உயரமான ஒரு மலைக்கு இயேசுவைக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி, “நீ ஒரேயொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான்.

அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய பரலோகத் தந்தையை மட்டுமே வணங்க வேண்டும். அவர் ஒருவருக்குத்தான் தூய்மையான சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார். இப்போது சாத்தான் தோல்வியுடன் அவரைவிட்டு விலகிப் போனான்.

இயேசுவுக்குச் சாத்தான் வைத்த சோதனைகளில் இருந்தும், சோதனைக்காரனாகிய அவனுக்கு அவர் கொடுத்த பதில்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியத் தருணமாக தவக் காலம் இருக்கிறது. ஒரே ஒருமுறை தன்னை வணங்கினால், உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்ஜியங்களையும் தருவதாக இயேசுவிடம் கூறி சாத்தான் ஆசை காட்டினான். அதைப் போலவே அவன் நமக்கும் ஆசை காட்டலாம். சொத்துகளை, சுகங்களை, பதவிகளை, அதிகாரத்தை, அந்தஸ்தைக் காட்டி நமக்கு அவன் வலை விரிக்கலாம்.

சாத்தான் என்னதான் ஆசை காட்டினாலும், இயேசுவைப் போல நாம் கடவுளுக்கு உண்மையானவர்களாக இருக்க வேண்டும். இதுதான் தவக்காலத்தில் நம்மைச் சீரமைத்துக்கொள்ள மீண்டும் தரப்படும் அரிய சந்தர்ப்பம்.

Next Story