கண் பார்வை குறைபாடு நீக்கும் ‘கண்டன் சாஸ்தா’


கண் பார்வை குறைபாடு நீக்கும் ‘கண்டன் சாஸ்தா’
x
தினத்தந்தி 16 March 2021 4:31 PM GMT (Updated: 2021-03-16T22:01:33+05:30)

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தின் அருகே கண் பார்வை குறைபாடு நீக்கும் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில் அமைந்துள்ளது,

இறை வழிபாட்டில் குல தெய்வ வழிபாட்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும், ஹரித்வார், ரிஷிகேஷ், காசி, ராமேஸ்வரம் என்று புனிதப் பயணம் சென்று வந்தாலும், தனது குல தெய்வத்தை வணங்கி வழிபட்டால்தான் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளையும், சவால்களையும் ஒருவரால் தாண்டி வர முடியும்.

கூட்டுக்குடும்பம் என்பது பழங்கதையாகி, கணவன்- மனைவி- ஒரு குழந்தை என்னும் சிறிய குடும்பமாக இன்றைய உலகம் மாறிவிட்ட நிலையில், தனது குல தெய்வம் எது என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. ஜோதிடம், பிரசன்னம் என்று பல வழிகளிலும் முயற்சித்த போதிலும் தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் கலங்கித் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது, ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ திருக்கோவில். தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாஸ்தாவை வழிபட்டால் சனி தோஷமும் நீங்குகிறதாம்.

இந்தக் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தின் அருகே, ஆஸ்ராமம் என்னும் அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது. கன்னியாகுமரிக்கு புனிதப் பயணம் வரும் பக்தர்கள் தவறாமல் சென்றுவரும் கோவில் இது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இக்கோவிலின் வரலாறு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.

ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ‘ஞானாரண்யம்’ என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில், அத்ரி மகிரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி அனுசூயா தேவி, கற்பில் சிறந்தவள். அவளது கற்பை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர், அத்ரி மகிரிஷி இல்லாத நேரத்தில் துறவிகள் போல வேடமணிந்து ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று துறவிகளும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி, தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க வந்தபோது, துறவிகள் மூவரும் திடுக்கிட்டது போல் எழுந்துவிட்டனர்.

“நான் என்ன தவறு செய்துவிட்டேன்?” என அனுசூயா அழுதபடியே அவர்களிடம் கேட்டாள்.

அதற்கு துறவிகள், “மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள், உண்ண வேண்டுமென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது” என பதில் கூறினர். தொடர்ந்து “பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பறிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம்” என்றனர்.

இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும், ‘கணவனே கடவுள் என்றும், கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் முனிவர்கள் கூறியவாறு அமுது படைப்பேன்’ எனத் தெளிந்து, தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து, கணவனை மனதில் தியானித்துக் கொண்டு “இவர்கள் குழந்தைகளாக மாறக்கடவது” என அத்துறவிகளின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள்.

என்ன ஆச்சரியம்? ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளாக மாறிவிட்டனர். பின்பு, தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூவரும், அத்ரி மகரிஷி ஆசிரமம் வந்து தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்குமாறு அனுசூயா தேவியை வேண்டிக்கொண்டனர். இதையடுத்து அனுசூயாதேவி, அவர்களுக்கு சுயவுருவை மீண்டும் அளித்தாள்.

அப்படிப்பட்ட பெருமை நிறைந்த அத்ரி மகிரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம்தான் இன்று ‘ஆஸ்ராமம்’ என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்ரி மகிரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறுவதும் உண்டு. அத்ரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம்தான் கோவிலின் அருகில் உள்ள தீர்த்தக்குளம் என்கின்றனர். இக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடினால் எல்லா நோய்களும் நம்மைவிட்டு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நூற்றாண்டுகளுக்கு முன்பு, பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். என்ன ஆச்சரியம்? அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி ‘அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா’ என உரக்கக் கூவினார். அது நாளடைவில் மருவி ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’வாக மாறிவிட்டதாம். ‘அஞ்சனம்’ என்றால் ‘மை’ என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.

இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். பொதுவாக சாஸ்தா கோவில்களில், ஐயப்ப சுவாமி போலவே சாஸ்தாவின் சிலையும், கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி, ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு, வலது கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் கேசமாக தோள்பட்டைக்குக் கீழே கிடப்பதோடு, நடு உச்சியில் கொண்டையும் பூநூலும் போட்டிருப்பதும் ஒரு விசேஷமான அம்சமாகும். கழுத்தில் பதக்கமும், இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும், திருநீற்றுப் பட்டையும் அணிந்து உள்ளார்.

இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது. முன் மண்டபத்தைத் தாண்டி கருவறையின் மேல்பகுதியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் உள்ளே நாகர், கணபதி சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் ஆலமரத்தடியில், தீர்த்த குண்டம் மோன தவத்தில் ஆழ்ந்திருக்கிறது. பங்குனி உத்திரத் திருவிழா இக்கோவிலில் வெகு பிரசித்தம்.

கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஆஸ்ராமம் அமைந்துள்ளது.

Next Story