திருமணத் தடை நீக்கும் திருமழப்பாடி நந்தி திருமணம்


திருமணத் தடை நீக்கும் திருமழப்பாடி நந்தி திருமணம்
x
தினத்தந்தி 23 March 2021 5:04 PM GMT (Updated: 2021-03-23T22:34:29+05:30)

கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூரில், மழவர்கள் என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர். இவர்களில் சிறந்த போர்வீரர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்று அழைக்கப்பட்டது. இதுவே பின்னாளில் ‘திருமழப்பாடி’ என்று மருவியதாக சொல்கிறார்கள்.சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.

தல வரலாறு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க வேண்டி தவம் இருந்தார், சிலாத முனிவர். அவர் முன்பாக தோன்றிய ஈசன், “நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்” என்று அருளினார்.

அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாத முனிவர், அதனுள் ஓர் அதிசய குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி, “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. சிலாத முனிவரும், பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி, அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘செப்பேசன்’ என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.

மகன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து, முனிவரின் மனைவியும் துயருற்றார். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.இதையடுத்து மற்றொரு சிறப்புமிகு நாளில், சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவை யாற்றில் இருந்து நந்தியம்பெருமான், குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயம்பிரகாசைக்கும் வெகு சிறப்பாக திரு மணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நந்தியம்பெருமான்- சுயம்பிரகாசை திருமணம் திருமழப்பாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐயாறப்பரும், அறம் வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்.இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

அமைவிடம்
திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.

திருமழப்பாடி ஆலய சிறப்பு
தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டும் அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.இறைவன் 
சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.

இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Next Story