பிரகலாதனை தீண்டாத தீ..


பிரகலாதனை தீண்டாத தீ..
x
தினத்தந்தி 23 March 2021 5:29 PM GMT (Updated: 23 March 2021 5:29 PM GMT)

ஹோலி பண்டிகை- வட இந்தியர்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று.

தென் மாநிலங்களில் இந்த பண்டிகையை கொண்டாடுவது குறைவுதான் என்றாலும், இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான காரணம், புராணக் கதையோடு தொடர்புடையது. எனவே இதுபற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. அனைவருக்கும் தெரிந்த பிரகாலதனின் வரலாற்றோடு இணைந்த கதை என்பதால், அது முன்னுரிமை பெற்றதாக மாறுகிறது.

அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகசிபுவின் மகனாக பிறந்தவர், பிரகலாதன். தன்னுடைய சகோதரனான இரண்யாட்சனை ஏற்கனவே வதம் செய்திருந்ததால், மகாவிஷ்ணுவின் மீது கடும் கோபம் கொண்டிருந்தான், இரண்யகசிபு. இந்த நிலையில் தன்னுடைய தாயின் கருவில் இருக்கும் போதே, நாரத முனிவரின் மூலமாக நாராயணரின் நாமத்தைக் கேட்டறிந்தவர், பிரகலாதன். இதன் காரணமாக அவர் பிறந்தது முதலே நாராயணரின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். தன் சகோதரனின் இறப்புக்கு காரணமான மகாவிஷ்ணு மீது மகன் பிரகலாதன் பக்தி கொண்டிருப்பது, இரண்யகசிபுவுக்கு 
கோபத்தை அதிகப்படுத்தியது. அந்தக் கோபம் தன்னுடைய மகனையே கொல்லும் அளவுக்கு உக்கிரமாக மாறியது.

தான் பெற்ற வரங்களால், ‘உலகையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்னைவிட உயர்ந்தவர் யார்?’ என்ற அகம்பாவம் இரண்யகசிபுவை சிந்திக்க விடாமல் செய்தது. “நானே கடவுள். என்னையே வழிபட வேண்டும்” என்று தன் மகனிடம் கூறினான். ஆனால் பிரகலாதன் கேட்கவில்லை. இதனால் மகன் என்றும் பாராமல், பல வழிகளிலும் பிரகலாதனை சித்ரவதை செய்ய தன் காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை வி‌ஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர். பாம்புகள் அவரை தீண்டவில்லை. மதம் கொண்ட யானையை 
மிதிக்கச் செய்தனர். அது பிரகாலதன் கழுத்தில் மாலை அணிவித்து விட்டு நகர்ந்துவிட்டது. மலையில் இருந்து உருட்டி விட்டனர். நாராயணரே தன்னுடைய திருக்கரங்களால், பிரகலாதனை தாங்கிக்கொண்டார். இப்படி அனைத்து துன்பங்களில் இருந்தும், பிரகலாதனை அவரது நாவில் இருந்து எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்த நாராணயரின் நாமம் காப்பாற்றியது. இரண்யகசிபு தன் மகனை, துன்புறுத்துவதற்கு மற்றொரு முயற்சியை கையில் எடுத்தான். இரண்யகசிபுவுக்கு, ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட, அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான். ஹோலிகாவிடம், தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அணைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான்.

சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக் கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது. அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில், ஹோலிகாவே எரிந்து சாம்பலாகிப்போனாள். ஆயினும் பிரகலாதனுக்கு ஒன்றும் நேரவில்லை. அவர் சிரித்தபடியே நெருப்பில் இருந்து வெளியே வந்தார். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, 
‘ஹோலி பண்டிகை’ கொண்டாடப் படுவதாக புராணத் தகவல் சொல்கிறது.

வட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு. ஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

Next Story