திருப்பம் தரும் திருக்குறுங்குடி நம்பி


திருப்பம் தரும் திருக்குறுங்குடி நம்பி
x
தினத்தந்தி 30 March 2021 1:23 AM GMT (Updated: 30 March 2021 1:23 AM GMT)

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது திருக்குறுங்குடி திருத்தலம். இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது திருக்குறுங்குடி திருத்தலம். இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஒரு மலைக்கோவில் ஆகும். நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தரான நம்பாடுவான் என்பவர், திருக்குறுங்குடி அடுத்த மகேந்திரகிரி மலையில் வாழ்ந்து வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவரான அவர், ஒரு முறை கார்த்திகை மாத வளா்பிறை ஏகாதசி அன்று விரதம் இருந்து, திருக்குறுங்குடி நம்பியை தரிசிக்க வந்தார். வழியில் பிரம்ம ராட்சசன் ஒருவன், நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாகக் கூறினான்.

உடனே நம்பாடுவான், தான் நம்பிராயரை தரிசிக்கச் செல்வதாகவும், தரிசனம் செய்துவிட்டு வருகையில் தன்னை உணவாக்கிக் கொள்ளும்படியும் வாக்குறுதி கொடுத்து விட்டுச் சென்றார். பின்னர் மலைக்கு சென்று நம்பியை தரிசித்தார். அவர் பாடிய பாடலுக்கு மயங்கிய இறைவன், அவருக்கு காட்சியளித்து ஒரு பழத்தையும் அளித்தார். தரிசனம் முடிந்ததும், காட்டில் பிரம்ம ராட்சசன் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார், நம்பாடுவான். வழியில் முதியவர் வடிவத்தில் வந்த இறைவன், நம்பாடுவானை வழிமறித்து, அந்தக் காட்டில் பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும், அவ்வழியே செல்வோனை தின்றுவிடுவதாகவும் எச்சரித்தார்.

ஆனால் நம்பாடுவான், பிரம்ம ராட்சசனுக்கு தான் கொடுத்து வாக்குறுதியை கூறி, அதை நிறைவேற்றவே தற்போது செல்வதாகச் சொல்லி வேகமாக நடந்தார். காட்டில் ஓரிடத்தில் பிரம்ம ராட்சசனைக் கண்ட நம்பாடுவான், தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளும்படியும் கூறினார்.

ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி, நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான், நம்பியைப் பாடி பெற்ற பழத்தில் பாதியை பிரம்ம ராட்சசனுக்குக் கொடுத்தார். அதை உண்ட பிரம்ம ராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவில் இருந்து விமோசனம் பெற்று, தன் முற்பிறவி வடிவத்தைப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

இந்த ஆலயத்தில் அருளும் நம்பிராயரை, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், தெய்வநாயகன் மற்றும் வரமங்கை ஆகியோரின் சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டது. அதன்படி குறிப்பிட்ட இடத்தை தோண்டியபோது, அந்த தெய்வ ரூபங்கள் கிடைத்தன. அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோவிலில், அந்த மன்னன் பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறார்கள்.

பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சன்னிதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்.

நம்பிராயர் கோவிலில் தினசரி விஸ்வரூபம், காலசந்தி, உச்சி கால பூஜை, சாயரட்சை, அத்தாழம், அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம், கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி, நவராத்திரி விழா ஆகியவை சிறப்புமிக்கது. விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்குறுங்குடி திருத்தலம் உள்ளது.

Next Story