நினைத்ததை நிறைவேற்றுமா ‘பிலவ’ ஆண்டு


நினைத்ததை நிறைவேற்றுமா ‘பிலவ’ ஆண்டு
x
தினத்தந்தி 5 April 2021 12:23 PM GMT (Updated: 2021-04-05T17:53:45+05:30)

புத்தாண்டு பிறக்கும் பொழுது, புத- ஆதித்ய யோகத்தோடும், புத - சுக்ர யோகத்தோடும், சுக்ரன் - செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தோடும், சொந்த வீட்டில் சனி வீற்றிருந்தபடியும் கிரக நிலை அமைந்துள்ளது.

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அஷ்டமத்துச் சனி நடைபெறும் மிதுன ராசியும், ஏழரைச் சனி நடைபெறும் கும்ப ராசியும், ஜென்மச் சனி நடைபெறும் மகர ராசியும், கண்டகச் சனி நடைபெறும் கடக ராசிக்காரர்களும் இந்த ஆண்டு அதிக விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். விரயங்களும், விரோதங்களும், இனிமை தராத இடமாற்றங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கலாம். தெய்வ வழிபாடுகளை சுய ஜாதக ரீதியாக தோ்ந்தெடுத்துச் செய்வதன் மூலம், தாக்கங்களில் இருந்து ஓரளவு விடுபடலாம்.

சுபஸ்ரீ பிலவ வருடப் பிறப்பு, சார்வரி வருடம் பங்குனி மாதம் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 1.32 மணியளவில், பரணி நட்சத்திரம் மேஷ ராசியில் சித்த யோகம் மகர லக்னத்தில் பிறக்கின்றது. 14.4.2021 (புதன்கிழமை) அன்று சித்திரை 1-ந் தேதி ஆரம்பமாகின்றது. ஆண்டின் தொடக்கத்தில் லக்னாதி பதி சனி, தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றார். 4-ம் இடத்தில் (மேஷ ராசி) சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. ரிஷபத்தில் ராகு, செவ்வாயுடன் இணைந்திருக்கின்றார். கும்பத்தில் குருவும், விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் விதத்தில் பிலவ புத்தாண்டு பிறக்கின்றது.

புத்தாண்டு பிறக்கும் பொழுது, புத- ஆதித்ய யோகத்தோடும், புத - சுக்ர யோகத்தோடும், சுக்ரன் - செவ்வாய் பரிவர்த்தனை யோகத்தோடும், சொந்த வீட்டில் சனி வீற்றிருந்தபடியும் கிரக நிலை அமைந்துள்ளது. மேலும் சர்ப்பக் கிரகங்களான ராகு-கேதுக்களின் ஆதிக்கத்திற்குள் மற்ற கிரகங்கள் எல்லாம் வீற்றிருக்கின்றன.

சித்திரை முதல் நாள் அன்று மிதுனத்தில் செவ்வாய் சஞ்சரித்து, மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போகின்றார். செவ்வாய் - சனி பார்வையால் இயற்கை சீற்றங்கள், நோய் தொற்றுகள், புதிய நூதன நோய்கள், கால்நடை மற்றும் விலங்கினங்கள் வாயிலாக பாதிக்கும் வைரஸ் தொற்றுக்கள் போன்றவற்றை மக்கள் சந்திக்க நேரிடும். ஆகையால், அனைவரும் மிகமிக விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய ஆண்டாகவே இந்த ஆண்டைக் கருதலாம்.

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கின்ற பொழுதும், இந்த ஆண்டு நமக்கு எப்படியிருக்கும்? நம்முடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறுமா? பொருளாதாரப் பற்றாக்குறை அகலுமா? பணிநீக்கம் செய்யப்பட்ட நிலை மாறி மீண்டும் பணியில் சேர இயலுமா? நோய் தொற்று அகன்று நிம்மதியாக வாழ வழி உண்டாகுமா? நின்றுபோன தொழில் மீண்டும் எப்பொழுது வெற்றி நடைபோடும்? என்றெல்லாம் நம் மனம் சிந்திக்கத் தொடங்கிவிடும். அந்த மனக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் வகையில் இந்த தமிழ் புத்தாண்டு ராசி பலன் எழுதப்பட்டுள்ளது.

கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்வின் வளர்ச்சி என்பதையும், கிரகப் பெயர்ச்சியே நாம் செய்யும் முயற்சிக்கு முத்திரை பதிக்கின்றது என்பதையும் மக்கள் அறிந்திருப்பதனால், கிரகங்களின் ஒப்பற்ற மாற்றங்கள் வரும்பொழுதெல்லாம் அதை வரவேற்க மக்கள் தயாராகி விடுகிறார்கள்.

இந்த ஆண்டு ராஜாவாகவும், அா்க்காதிபதி, மேகாதிபதியாகவும், சேனாதிபதியாகவும் செவ்வாய் பொறுப்பேற்கின்றார். மந்திரியாக புதனும், சஸ்யாதிபதியாக சுக்ரனும், ரஸாதிபதியாக சூரியனும், தான்யாதிபதியாக குருவும், நிரஸாதிபதியாக சுக்ரனும் பொறுப்பேற்கிறார்கள். அதைப் பொறுத்து மக்களுக்கு நல்ல வழிபிறக்கும். நவ நாயகர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளுக்கேற்ப, அந்தத் துறைகளில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டே இருக்கும்.

வருடாதி வெண்பா படி, இந்த ஆண்டில் மழை குறைவாகப் பெய்யும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தொல்லை அதிகரிக்கும். நான்கு கால் ஜீவன்களுக்கு பாதிப்பு உருவாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இது பொதுவான கருத்துதான். இந்தப் புத்தாண்டின் கிரக நிலைக்கேற்பவும், வக்ர காலம், குரு பார்வை காலம், பகை கிரகங்களின் சேர்க்கை காலம் ஆகியவற் றைக் கொண்டு ஆராய்ந்தே பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ராஜாவாக செவ்வாயும், மந்திரியாக புதனும், தான்யாதிபதியாக குருவும் இருப்பதால், மக்களுக்குத் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உருவாகும். மக்கள் நலம்பெற, வரப்போகும் புதிய ஆட்சி வழிவகுத்துக் கொடுப்பதோடு, நலத்திட்டங்களை வழங்கி மகிழ்ச்சி தரும். உணவுப் பொருட்கள், பால் மற்றும் தானியங்கள், எரிவாயு, பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை அதிகரித்தாலும், மக்களுக்கு வாங்கும் திறன் கூடும். குறிப்பாக செவ்வாய் - சனி பார்வை இருப்பதால், நோய் தொற்றுக் கிருமிகள் பரவாமல் இருக்கவும், ஆரோக்கியத்தை சீராக்கிக் கொள்ளவும் மக்கள் அனைவரும் சுகாதாரத் துறை சொல்லும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடப்பது அவசியமாகும்.

Next Story