ஆன்மிகம்

சங்கடம் நீக்கும் சதுர்த்தி + "||" + Eliminate embarrassment Sathurthi

சங்கடம் நீக்கும் சதுர்த்தி

சங்கடம் நீக்கும் சதுர்த்தி
விநாயகரை வழிபாடு செய்தால், எடுத்த காரியங்கள் எந்த தடையும் இன்றி நடந்தேறும் என்பது ஐதீகம். சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம் பாடி வழிபாடு செய்யலாம்.
விநாயகரை வழிபட உகந்த நாளாக, சதுர்த்தி திதி உள்ளது. இந்த நாளில் விநாயகரை வழிபாடு செய்தால், எடுத்த காரியங்கள் எந்த தடையும் இன்றி நடந்தேறும் என்பது ஐதீகம். சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம் பாடி வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தி எனப்படும் தேய்பிறை சதுர்த்தி திதி அன்று, விநாயகர் கவசம் பாடினால், நம்முடைய சந்ததியினர், கல்வியிலும், செல்வத்திலும், வீரத்திலும் தலைசிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஆனைமுகன் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் கூட விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இப்படிச் சொல்லி வைத்தார்கள். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினி யிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.

விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அங்கு திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோவிலும், வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். தமிழ்நாட்டிலும் விநாயகர் இல்லாத இடம் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு தெருவிலும் ஒரு விநாயகர் கோவில் சிறிய அளவிலாவது இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு விநாயகர் வழிபாடு மக்கள் மத்தியில் இரண்டற கலந்து போய்விட்டது.

வெள்ளிக்கிழமை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயகர் விரதம், துர்வாஷ்டமி விரதம், நவராத்திரி விரதம், வெள்ளிப் பிள்ளையார் விரதம், செவ்வாய்ப் பிள்ளையார் விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகருக்கான விரதங்கள் ஆகும். இவற்றில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் சிறப்புவாய்ந்தது.