ஆன்மிகம்

புனிதமான பக்தியால் புண்ணியம் பெற்ற புனிதவதி + "||" + By sacred devotion Blessed Punithavathi

புனிதமான பக்தியால் புண்ணியம் பெற்ற புனிதவதி

புனிதமான பக்தியால் புண்ணியம் பெற்ற புனிதவதி
திருமணத்திற்குப் பிறகு, புனிதவதி கணவருடன், காரைக்கால் பகுதியிலேயே வசித்து வந்தார்.
தற்போதைய காரைக்கால் பகுதி, முன் காலத்தில் ‘காரை வனம்’ என்று அழைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் வணிகத் தொழிலை செய்து வந்தனர். இங்கு வணிகர்களின் தலைவராக இருந்தவர் தனதத்தன். இவருக்கும், இவரது மனைவி தர்மவதிக்கும் மகளாகப் பிறந்தவர், புனிதவதி. பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட இவர், சிறுவயது முதலே சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்தார். பருவ வயது வந்ததும் புனிதவதியை, நாகப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

திருமணத்திற்குப் பிறகு, புனிதவதி கணவருடன், காரைக்கால் பகுதியிலேயே வசித்து வந்தார். ஒரு முறை பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் வருகை தந்தார். அவர் தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தனிடம் கொடுத்தார். அக்கனிகளை அவர் தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் புனிதவதியின் பக்தியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அடியார் வேடத்தில் உணவு வேண்டி, அவரது வீட்டு வாசலில் வந்து நின்றார். அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் தந்து உபசரித்தார், புனிதவதி. அதனை உண்ட சிவனடியார் புனிதவதியை வாழ்த்திச் சென்றார். இதற்கிடையில் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு, பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய புனிதவதி, மீதமிருந்த ஒரு மாங்கனியை தன்னுடைய கணவரின் இலையில் வைத்தார்.

மாங்கனியின் சுவை நன்றாக இருந்ததால், மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கூறினார், பரமதத்தன். இதனால் செய்வதறியாது திகைத்த புனிதவதி, ‘இல்லை’ என்று சொன்னால் கணவர் கோபித்துக் கொள்வாரோ என்று நினைத்து, பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை நினைத்து இருகரத்தையும் நீட்டி வேண்டினார். அப்போது ஆச்சரியப்படும் வகையில் அவரது கையில் ஒரு மாங்கனி தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதி, அதனை கணவருக்கு பரிமாறினார்.

முதலில் வைத்த மாங்கனியைவிட இந்தக் கனி அதிக சுவையுடன் இருந்தது. இதனால் பரமதத்தனுக்கு சந்தேகம் உண்டானது. ‘ஒரே மரத்தில் இருந்து வந்த இரண்டு மாங்கனி களிலும் இவ்வளவு சுவை வித்தியாசம் எப்படி இருக்கும்?’ என்று நினைத்தார். உடனே மனைவியிடம், “இந்தப் பழம் ஏது?” என்று கேட்டார். கணவரிடம் பொய் சொல்ல விரும்பாத புனிதவதி, நடந்ததை அப்படியே எடுத்துரைத்தார்.

ஆனால் இதனை பரமதத்தன் நம்பவில்லை. “ஈசனே.. உனக்கு கனி தந்தார் என்பதை எப்படி நம்புவது? மீண்டும் ஒரு கனியை சிவபெருமானிடம் சொல்லி உன்னால் வரவழைக்க முடியுமா?” என்று கேட்டார்.

இதையடுத்து புனிதவதி மீண்டும் சிவபெருமானை வணங்க, முன்பு போலவே இப்போதும் ஒரு மாங்கனி, புனிதவதியின் கரங்களில் தோன்றியது. இதைக் கண்டு வியப்படைந்த பரமதத்தன், “நீ மனிதப் பிறவியே இல்லை. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்ந்தால் அது சரிபட்டு வராது” என்று கூறி விட்டு, வாணிபம் செய்வதற்காக பாண்டியநாடு சென்றுவிட்டார்.

மதுரை மாநகர் சென்ற பரமதத்தன் அங்கு, வேறு ஒரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர் களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, தன் முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று சூட்டினார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, தன்னுடைய உறவினர்களின் மூலமாக புனிதவதிக்கு தெரியவந்தது. அவர், தன் உறவுகளுடன் பாண்டிய நாடு சென்றார். அங்கு வசித்த பரமதத்தனின் இல்லத்தைக் கண்டுபிடித்தார். புனிதவதியைக் கண்ட பரமதத்தன், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். அதோடு தன்னால் இறைசக்தி படைத்த பெண்ணோடு வாழ முடியாது என்று உறுதிபட தெரிவித்து விட்டார்.

கணவரே இல்லை என்ற பிறகு, தனக்கு அழகு மேனி எதற்கு என்று எண்ணிய புனிதவதி, தன்னுடைய உருவத்தை பேய் வடிவமாக மாற்றும்படி இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அப்படியே செய்தார். இதையடுத்து இறைவனைக் காண்பதற்காக, கயிலாயம் புறப்பட்டார், புனிதவதி. ‘கயிலாயம்’ இறைவன் குடியிருக்கும் புனிதமான இடம் என்பதால், அங்கு தன்னுடைய கால் படக் கூடாது என்பதற்காக, தலைகீழாக நடந்து சென்றார்.

இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால், இறைவா உன்னை என்றும் மறவாமை வேண்டும். நீ ஆடும் போது உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டும்” என்றார். அவ்வாறே அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்தார். அங்கு தன் திருவடி யின் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற புனிதவதி, 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருப்பதாக வரலாறு சொல்கிறது. இறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும் இவர் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக காரைக்கால் அம்மையார் சிறப்பு பெறுகிறார். காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் ஒரு மாத காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

மாங்கனியின் மகிமை

முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது, காரைக்காலில் மட்டும்தான். சாமிக்கு மாங்கனியுடன் பட்டுத் துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதி உலாவை தொடர்ந்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்வு ஒரு வழக்கமாகவே மாறி இருக்கிறது. இப்படி இறைவனின் மீது சூறைவிடப்படும் மாங்கனியை, குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தயிர் அன்னம் படையல்

சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லம் மட்டுமே என்பதை புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பரிமாறுவார். எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர் சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர்கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர்.

அமர்ந்த நிலையில் அம்மையார்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே, அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். அதற்கு காரணம் இருக்கிறது. கணவர் தன்னுடன் வாழ மறுத்ததும், இறைவனை வேண்டி பேய் உருவம் பெற்றார், புனிதவதி. பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், ‘அம்மையே அமர்க’ என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.