ஆன்மிகம்

பிரம்மனின் ஆயுளை குறைத்த விஷ்ணு + "||" + Vishnu shortened the life of Brahman

பிரம்மனின் ஆயுளை குறைத்த விஷ்ணு

பிரம்மனின் ஆயுளை குறைத்த விஷ்ணு
ஆரம்பத்தில் சாகாவரம் பெற்றிருந்த பிரம்மனின் ஆயுளை மகாவிஷ்ணு சூட்சுமமாக குறைத்தார்.
மும்மூர்த்திகளில் முதன்மையானவராக இருப்பவர் சிவபெருமான். அவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து தொழில்களை செய்து பரம்பொருளாக ஆட்சி செய்கிறார். பின்னர் மகாவிஷ்ணுவுக்கு காத்தல் தொழில் வழங்கப்பட்டது. விஷ்ணுவின் நாபியில் இருந்து வெளிப்பட்ட பிரம்மனுக்கு படைப்புத் தொழில் வழங்கப்பட்டது. படைக்கும் தொழிலைச் செய்து வந்த பிரம்மதேவன், ஆரம்பத்தில் சாகாவரம் பெற்றிருந்தார்.

சாகாவரம் காரணமாக, அவரது மனதில் ஆணவம் அதிகரித்திருந்தது. தனது பணியையும் கூட அவர் சரியாகச் செய்யவில்லை. படைக்கும் தொழிலைச் செய்யும் தன்னைவிட, அனைவரும் தாழ்வானவர்களே என்று நினைத்தார். இதை அறிந்த மகாவிஷ்ணு, பிரம்மனுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார்.

மகாவிஷ்ணுவின், வாமன அவதாரம் நிகழ்ந்த போது, அவர் திரிவிக்கிரமனாக உயர்ந்து நின்று, தன் காலால் மூன்று உலகங்களையும் அளந்தார். அந்தக் கோலத்தை காண வேண்டும் என்று உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. இதனை பிரம்மனின் ஆணவத்தை அடக்குவதற்கு பயன்படுத்திக்கொள்ள நினைத்தார், மகாவிஷ்ணு.

தன்னுடைய ஆசை நிறைவேறுவதற்காக, உரோமச முனிவர் தனியொரு இடத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, முனிவரின் விருப்பப்படியே தனது இடது காலை தூக்கி, திரிவிக்கிரம அவதாரத்தை காட்டி அருளினார்.

பின்னர் உரோமச முனிவரிடம், “உரோமசரே.. என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள், பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை அடைவீர்கள்” என்று வாழ்த்தினார், மகாவிஷ்ணு. மேலும் “பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெறுவீர்கள். அதன்படி உமது உடலில் இருந்து ஒரு முடி உதிர்ந்தால், பிரம்மனின் ஆயுள்காலத்தில் ஒரு வருடம் முடியும்” என்று கூறினார்.

மகாவிஷ்ணு சூட்சுமமாக, தன்னுடைய ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மதேவனின் ஆணவம் அப்போதே அழிந்து போனது. பல யுகங்களைக் கொண்டது ஒரு கல்ப காலம். அப்படி ஒரு கல்ப காலம் முடியும் நேரத்தில், ஒரு பிரம்மன் மறைந்து, மற்றொரு பிரம்மன் தோன்றுவதாக புராணங்கள் சொல்கின்றன.