ஆன்மிகம்

குழந்தைப்பேறு வழங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் (11-4-2021 பங்குனி அமாவாசை) + "||" + Thiruvalankadu Vadaranyeswarar who provides childbirth (11-4-2021 Panguni New Moon)

குழந்தைப்பேறு வழங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் (11-4-2021 பங்குனி அமாவாசை)

குழந்தைப்பேறு வழங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் (11-4-2021 பங்குனி அமாவாசை)
குழந்தைப்பேறு வழங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரரை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது, தல புராணம்.
புதியதாக திருமணமான தம்பதியரிடம், சில மாதங்களிலேயே கேட்கப்படும் கேள்வியாக இருப்பது, ‘ஏதாவது விசேஷம் உண்டா?’ என்பதுதான். இங்கு விசேஷம் என்பது புத்திர பாக்கியம். அந்த அளவுக்கு பிள்ளைப்பேறு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

திருக்கடையூர் அபிராமி அன்னையை பாடும், அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணியில்லாத உடல், சலியாத மனம், அன்பகலாத மனைவி’ என்பதோடு சேர்த்து, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார். சந்தானம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும். எல்லாவற்றையும் சாதாரணமாக கேட்டவர், குழந்தைப்பேறு என்பதை மட்டும் தவறாமல் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதில் இருந்தே, அதற்கான முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில் குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது. ஏனெனில் இந்தத் திருத்தல இறைவனை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது, தல புராணம்.

திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் இருக்கின்றன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள, ஈசனின் ஊர்த்தவ நடனம் நடைபெற்றதும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் ஒன்றுதான். அந்த எல்லை தெய்வத்தின் பெயர், வடபத்திரகாளி அம்மன்.

நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ ஆகும். காசியப முனிவரின் முதல் மனைவியாக அறியப்படுபவர் அதிதி தேவி. இவர் இந்த ஆலய தீர்த்தத்தில் நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்ததன் பலனாகத்தான் புத்திர பாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரனும் கூட, தனது மகனான ஜெயந்தனை, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடிதான் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

பரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். ஒவ்வொரு ஆலயமாகச் சென்று இறைவனை வழிபாடு செய்யத் தொடங்கினான். ஒரு முறை திருத்துருத்தியில் உள்ள அமிர்த முகிழாம்பிகை உடனாய சொன்னவாறு அறிவார் திருக்கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தான். அந்த வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்த ஈசன், “பரதா! நீ அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று, அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடு. அதோடு அங்கு வீற்றிருக்கும் வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபாடு செய். கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில், திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபாடு செய்தால், மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார்.

பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காக காத்திருந்து, திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.

இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை சிறிது சேதமானதால், புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?’ என கேட்க, உடனே பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.

இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.

பழைய வண்டார்குழலி அம்மன் அருகில், தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டுவர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவிரி அம்மன், வள்ளி -தெய்வானை உடனாய முருகர் சன்னிதிகளும் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.