சென்னையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் திரளான மக்கள் சாமி தரிசனம்


சென்னையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் திரளான மக்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 15 April 2021 1:25 AM GMT (Updated: 2021-04-15T06:55:32+05:30)

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர்.

சென்னை, 

சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழ் நெஞ்சங்களால் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து மழை பெய்த வண்ணமாக இருந்தது. இத்துடன் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வான்மகளின் சாரல் மழையும் பெய்து, சென்னையில் அனைவரின் மனங்களையும் குளிர்வித்தது.

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ் கடவுளான முருகப்பெருமான் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சென்னையில் உள்ள வட பழனி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து முருகப்பெருமானை வழிபட்டனர். இதேபோல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இந்த நாளில் கனி காண்பது சிறப்புக்குரியது என்பதால் சென்னை ராஜா அண்ணாமலை அய்யப்பன் கோவிலில் விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பக்தர்கள் சமூக இடைவெளியை பயன்படுத்தி தரிசனம் மேற்கொண்டனர். பல கோவில்களில் பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டது.

வீடுகளிலும் பொதுமக்கள் வாசலில் அழகிய கோலமிட்டும், அறுசுவையில் உணவு தயார் செய்து அதை இறைவனுக்கு படைத்து வழிபட்ட காட்சிகளை பார்க்க முடிந்தது.

Next Story