இயேசுவின் இரண்டாம் வருகைக்கு தயாராகுங்கள்


இயேசுவின் இரண்டாம் வருகைக்கு தயாராகுங்கள்
x
தினத்தந்தி 19 April 2021 10:15 PM GMT (Updated: 2021-04-20T00:20:38+05:30)

சிலுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த இயேசு, பூவுலக வாழ்க்கையின்போது தன்னுடைய இரண்டாம் வருகை குறித்து, தெளிவாக கூறிச் சென்றிருக்கிறார்.

மத்தேயு புத்தகம் 25-வது அதிகாரம், 31 முதல் 46 வரையிலான இறை வசனங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை உறுதிசெய்யும். அதேநேரம், அவரை வரவேற்க நம்மை எவ்வாறு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகின்றன. அந்த வசனங்களைக் காண்போம்.

இயேசு தம் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது கூறியது, “வானதூதர் அனைவரும் புடைசூழ, மானிடமகன் மாட்சியுடன் வருவார். அப்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறிஆடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல், அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உங்களது உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ‘ஆண்டவரே, எப்பொழுது உமக்கு உணவளித்தோம், உமது தாகத்தைத் தணித்தோம், எப்பொழுது உம்மை ஏற்றுக்கொண்டோம், ஆடை அணிவித்தோம், எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம், எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். சாத்தானுக்கும் அவனது தூதர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அந்நியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் முடிவில்லா வாழ்வு பெறவும் செல்வார்கள்.” (மத்தேயு 25: 31- 46). என்றார்.

இயேசு போதித்த உவமைகளில், நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஒரே உவமை இதுதான். சக மனித தேவைகளுக்கு நாம் எவ்வாறு பங்களிக்கிறோம் என்ற கேள்வியை இந்த உவமை நம்மை நோக்கி எழுப்புகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவர் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்கள் தகுதிக்கு ஏற்ப செய்யக்கூடிய மிகச் சாதாரண செயல்களைத்தான். இந்த உவமையில் இயேசுவின் வலது பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பது தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய செயல்கள் எத்தனை மகத்துவமானவை என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார்.

நாம் செய்ய முடியாததை கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. பிறருக்கு நம்மால் செய்யமுடிந்த சிறுசிறு உதவிகளை செய்யவே, அவர் அறிவுறுத்துகிறார். எனவே சக மனிதருக்குக் கைகொடுக்கவும், கைதூக்கிவிடவும் மறக்காதீர்கள். அப்போது ஆண்டவரை வரவேற்கும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.

Next Story