ராமன் வழிபட்ட திருப்புல்லாணி


ராமன் வழிபட்ட திருப்புல்லாணி
x
தினத்தந்தி 19 April 2021 10:45 PM GMT (Updated: 2021-04-20T00:30:08+05:30)

ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது.

இது ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ஆலயமாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை பார்ப்போம்.
பிள்ளை வரம்

நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் வருந்தி வந்த தசரத மகாராஜன், பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றை நடத்தினார். யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் வழங்கிய பாயசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் கொடுத்தார். இதையடுத்து முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர். இதன் அடிப்படையில், குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், அதிகாலையில் சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலை முன்பாக ஒரு நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பட்டாபிராமன்

ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் சிவபூஜை ஒன்றை செய்தார், ராமபிரான். பின்னர் திருப்புல்லாணி வந்து இங்குள்ள இறைவனை தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, லட்சுமணருடன் கொடிமரத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாலிக்கிறார். சித்திரை மாதத்தில் இவருக்கு பிரமோற்சவம் நடக்கிறது. சீதையை மீட்பதற்கு முன்பாகவும் இந்த ஆலயத்தில் அருளும் ஜெகந்நாதரை, ராமர் வழிபட்டுச் சென்றுள்ளார். அப்போது திருப்புல்லாணி இறைவன், ராமனுக்கு ஒரு பாணத்தை வழங்கியுள்ளார். அந்த பாணத்தை பிரயோகித்துதான், ராமபிரான் ராவணனை அழித்ததாக சொல்லப்படுகிறது. எனவே எச்செயலை தொடங்கும் முன்பும், இங்குள்ள ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை.

சயன ராமன்

ராவணனால் கடத்தப்பட்ட சீதை, இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்தாள். அவளை மீட்க வேண்டிய கட்டாயம் ராமனுக்கு ஏற்பட்டது. இலங்கை செல்ல வேண்டும் என்றால், கடலைக் கடந்துதான் போக முடியும். எனவே கடலில் பாலம் அமைக்க, சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப் புல்லின் மீது சயனம் (படுத்து) கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால், இந்த ஆலயத்தில் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், பாலம் அமைக்க ஆலோசனை செய்த நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் தேவர்கள் காட்சி தருகின்றனர்.

மனைவியுடன் சமுத்திரராஜன்

இலங்கைக்கு செல்வதற்கு, கடல் மேல் பாலம் கட்ட வேண்டியது இருந்ததால், அதற்கு அனுமதி கேட்டு, மூன்று நாட்கள் காத்திருந்தார், ராமபிரான். ஆனால் அவரது கோரிக்கையை சமுத்திர ராஜன் கண்டுகொள்ளாமல் இருந்தான். ராமரின் முன்பாகத் தோன்றி எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் கோபம் கொண்ட ராமபிரான், கடலை நோக்கி அம்பு எய்ய முன்வந்தார். ராமரின் வில் மகிமையை அறிந்திருந்த சமுத்திரராஜன், தனது மனைவி சமுத்திர ராணியுடன் அங்கு தோன்றி, ராமபிரானை சரணடைந்தான். இதை நினைவுபடுத்தும் விதமாக, சயன ராமர் சன்னிதியின் முன் மண்டபத்தில், சமுத்திரராஜன் தன் மனைவியுடன் இருக்கும் திருமேனி காணப்படுகிறது. அருகில் ராமருக்கு உதவிய விபீஷணன் உள்ளார்.

Next Story