மனிதகுலம் பெற்ற மாபெரும் பாக்கியம்


மனிதகுலம் பெற்ற மாபெரும் பாக்கியம்
x
தினத்தந்தி 28 April 2021 11:38 AM GMT (Updated: 2021-04-28T17:08:28+05:30)

“ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது.

ரமலான் மாதம் புனிதமானது என்று அழைக்கப்படுவதற்கு காரணம்- அந்த நாட்களில் பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு வைத்து நற்செயல்களை செய்வதால் மட்டுமல்ல. அந்த மாதத்தில் தான் புனிதமிகு அருள்மறை திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.

“ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (திருக்குர்ஆன் 2:185).

மனித குலம் பெற்ற மாபெரும் பாக்கியம் திருக்குர்ஆன் என்பதை பின் வரும் வசனங்களின் மூலம் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:

“அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் அலைஹிவஸல்லாம் மூலமாக நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய இதுதான் வேத நூல், இதில் சந்தேகமே இல்லை. இறையச்சம் உடையவர்களுக்கு இது நேரான வழியை காட்டும்”. (திருக்குர்ஆன் 2:1-2)

“(நபியே) அல்லாஹ்வே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் (திருக்குர்ஆனையும்) இறக்கியுள்ளான். (திருக்குர்ஆன் 3:3,4)

“இது (திருக்குர்ஆன்) உலக மாந்தர் அனைவருக்கும் நல் உபதேசமே ஆகும்”. (திருக்குர்ஆன் 6:90)

(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள். (திருக்குர்ஆன் 7:204).

திருக்குர்ஆன் அருளப்பட்டது ஒரு நாட்டினருக்காகவோ, ஒரு மதத்தினருக்காகவோ, ஒரு சாராருக்காகவோ அல்ல. உலக மக்கள் அனைவருக்கும் பொது மறையாகத்தான் அருளப்பட்டது. இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அத்தனை உயிர்களும் உலகில் மேம்பட்டு வாழ சொல்லப்பட்ட நன்னெறி வாழ்வியல் தத்துவங்கள் தான்.

‘இறைவன் ஒருவனே’ என்பது இதன் அடிப்படை. ஆனால் அதையும் தாண்டி சொல்லப்பட்ட மற்றவை எல்லாமே மனிதன் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளின் தீர்வாக தான் அமைந்திருக்கின்றது.

மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், சகோதரர்கள் என்று சமத்துவத்தையும், பெண்ணினத்தின் உயர்வையும், அதன் விடுதலையையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் வலியுறுத்தியது. பக்கத்து வீட்டாரின் உரிமைகள், உறவுகளோடு மனிதர்களின் ஈடுபாடு, வணிகங்களில், தொழில்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியாயம், அனாதை-ஏழைகளை அரவணைக்க கூடிய அன்பு... என்று எல்லா விஷயங்களிலும் உள்ள நடைமுறைகள், நெறிமுறைகளை திருக்குர்ஆன் விளக்குகிறது.

இறைவணக்க வழிபாடுகளில் எந்தவித வேறுபாடுகள் இன்றி தோளோடு தோள் சேர்ந்து அனைவரும் சமம் என்ற தத்துவத்தை முன்னிலைப்படுத்துகிறது திருக்குர்ஆன். அதுபோல ஆணுக்குரிய எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்று அரபு உலகில் புரட்சியைக்கொண்டு வந்தது திருக்குர்ஆன். விதவைகள் மறுமணம் புரிய வழி செய்யப்பட்டது, சொத்துரிமையில் மூன்றில் இரண்டு பங்கு, மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்பட பல்வேறு பெண்ணிய உரிமைகள் குறித்து திருக்குர்ஆன் விளக்குகிறது.

பக்கத்து வீட்டார், எந்த மதத்தவராக இருந்தாலும் அவர் உரிமைகள் பேணப்பட வேண்டும். அவர் பசித்திருக்க நீ வயிறார உண்பதற்கு உரிமை கிடையாது. நல்ல உணவு நீ சமைக்கும்போது அவருக்கான பங்கையும் அதில் சேர்த்து விடு. அவர் சுக துக்கங்களில் பங்கு எடுப்பது உனது கடமை என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

அதுபோல, ‘உறவுகளை பகைத்து வாழ்பவன் சொர்க்கத்தின் நறுமணத்தை கூட நுகர முடியாது’ என்று எச்சரிக்கையை விடுத்து உறவுகளோடு இணைந்து வாழ வழிகாட்டுகிறது திருக்குர்ஆன்.

“நிறுவைகளை அளவுகளை நீதமாய் அளந்து கொடுங்கள்” என்கின்றது திருக்குர்ஆன். பொருள்களின் உண்மை தன்மையைச் சொல்லி வியாபாரம் செய்யுங்கள், பதுக்கல், கலப்படம் செய்யாதீர்கள், அதிக விலைக்கு விற்காதீர்கள் என்றும் எச்சரிக்கை செய்கிறது.

இப்படிப்பட்ட நன்னெறிகளை சொல்வதால் திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. எந்த மதத்தவர் ஆனாலும் இதனை படிக்கலாம், அதன்படி நடக்கலாம். அதன் தத்துவங்களை நடைமுறைப்படுத்தலாம், எந்தத் தடையும் இல்லை.

எனவே மனிதம் வாழ நன்னெறிகளின் தத்துவமாய் கிடைத்த புனிதநூல் திருக்குர்ஆன், நாம் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இதுகிடைத்திருப்பது மனிதகுலம் பெற்ற மாபெரும் பாக்கியம் என்றால் அது மிகையல்ல.

Next Story