ஆன்மிகம்

உடலை இயக்கும் பஞ்ச கோசங்கள் + "||" + Directing the body Famine slogans

உடலை இயக்கும் பஞ்ச கோசங்கள்

உடலை இயக்கும் பஞ்ச கோசங்கள்
‘அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்’ என்ற வாக்கியம் உருவானது. வேதங்களை விளங்கிக்கொள்வதற்காக உருவானவையே உபநிடதங்கள் என்று சொல்லப்படுகிறது.
பிரபஞ்சம் எனப்படும் இந்த உலகத்தில் காணப்படும் அதிசயங்கள் அனைத்தும், மனித உடலிலும் இருப்பதாக பல மகான்கள் சொல்லியுள்ளனர். அதனை குறிப்பிடும் வகையில்‘அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில்’ என்ற வாக்கியம் உருவானது. வேதங்களை விளங்கிக்கொள்வதற்காக உருவானவையே உபநிடதங்கள் என்று சொல்லப்படுகிறது. உபநிடதங்கள் மனித உடலை, பகுத்துக் கூறுகின்றன. தைத்ரிய உபநிடதம் என்பதில், மனித உடல் பஞ்ச கோசங்களாக பிரித்து கூறப்பட்டுள்ளது. ‘கோசம்’ என்பதற்கு ‘உறை’ என்றும், ‘பஞ்ச’ என்பதற்கு ‘ஐந்து’ என்றும் பொருள். மனித உடலில் இருக்கும் ஐந்து விஷயங்கள் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தையும்தான் ‘பஞ்ச கோசங்கள்’ என்கிறார்கள்.

அன்னமய கோசம்

‘அன்னம்’ என்பது உணவைக் குறிக்கும். கண்ணுக்கு புலப்படும் நமது உடலானது, உணவால் தோன்றி உணவால் வளர்கிறது. பின் உணவின் அடிப்படையாக இருக்கும் மண்ணில் சிதைந்து அழிகிறது. உடலுக்கும், வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவதை உணர்த்துவதே ‘அன்னமய கோசம்’ ஆகும்.

பிராணமய கோசம்

காற்று அனைத்து இடங்களிலும் உள்ளது. இது மனித உடலிலும் மூச்சுக் காற்றாக இருக்கிறது. இந்த காற்றின் இயக்கத்தினால்தான், உடலின் அனைத்து உறுப்புகளும் சுதந்திரமாக இயங்குகின்றன. காற்றின் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள் ஆகியவை ‘பிராணமய கோசம்’ என்று சொல்லப்படுகின்றன.

மனோமய கோசம்

மனித உணர்வுகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது, மனம். அந்த மனதின் பல்வேறு அடுக்குகள், அவற்றின் செயல்பாடுகள் ஆகியவையே ‘மனோமய கோசம்’ என்று வகைப்படுத்தப்படுகின்றது.

விஞ்ஞானமய கோசம்

இதனை பகுத்தறிவு என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். எது சரி.. எது தவறு?, எதைச் செய்யலாம்.. எதைச் செய்யக்கூடாது? எது உண்மை.. எது பொய்? நிலையானது எது.. நிலையற்றது எது? போன்ற விவாதத்திற்கு உரிய விஷயங்களை மேற்கொள்வதுதான், நம்முடைய பகுத்தறிவும், சிந்தனைத் திறனும். அறிவுசார்ந்த இயல்புகளும், செயல்பாடுகளும் அடங்கிய இடமே, ‘விஞ்ஞானமய கோசம்’ எனப்படுகிறது.

ஆனந்தமய கோசம்

மேற்கண்ட நான்கு அடுக்குகளுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் ஒரு நிலையே, ‘ஆனந்தமய கோசம்’ ஆகும். மற்ற நான்கு கோசங்களையும், நாம் உணரவோ, அறியவோ முடியும். ஆனால் ஆனந்தமய கோசம் என்பது நம்முடைய புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. இந்த நிலையை உணர்வதும், அடைவதும்தான் ஆன்மிகத்தின் லட்சியமாகும். அந்த ஆனந்தத்தையே ‘பரப்பிரம்மம்’ (அடிப்படை மெய்பொருள்) என்கிறார்கள்.